இலங்கை – இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா கூறினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் உள்ளது என அண்மைக்காலமாக இலங்கையில் கூறப்பட்டு வருகிறது. அப்படியொரு பாலம் அமைக்கப்பட்டால் அது தீக்கிரையாக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான உதயா கமன்பிலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அதிபர் ராஜபட்சவின் தீவிர ஆதரவாளரான அவர் வெளியிட்ட அந்த அறிக்கையால், அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பேசியதாவது:
இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் உள்ளது என்று கூறப்படுவது ஆதாரமற்ற செய்தி. அடிப்படையில்லாமல் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் தேர்தலின்போது அரசியல்வாதிகள் பேசியதன் அடிப்படையில் பாலம் கட்டுவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அது உண்மையில்லை. அப்படியொரு பாலம் கட்டும் திட்டம் கிடையாது என்றார் அவர்.
இலங்கை -இந்தியா இடையேயான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கும் இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நலனை இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் இந்த உடன்படிக்கையால், இலங்கை மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.