‘‘ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது’’ என்று நடிகை திரிஷா கூறினார்.
இதுகுறித்து நடிகை திரிஷா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:–
‘‘எனது சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக செல்கிறது. இவ்வளவு காலம் கதாநாயகியாக நீடிப்பது சாதாரண விஷயம் இல்லை. திறமை மட்டும்தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அதிர்ஷ்டமும் இருக்கிறது. எனது எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த திட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. சினிமாவில் அறிமுகமானபோதும் அந்த சிந்தனை இல்லை. இப்போதும் இல்லை.
ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. தமிழ், தெலுங்கு பட உலகில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நான் நடித்து விட்டேன். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற மூத்த நடிகர்களுடனும் அடுத்த தலைமுறை நடிகர்களான மகேஷ்பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடனும் நடித்து விட்டேன்.
தமிழில் விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஆகியோருடன் நடித்து விட்டேன். கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறேன்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. ரஜினியுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு அமையாதது வருத்தமாக இருக்கிறது. ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.’’
இவ்வாறு திரிஷா கூறினார்.