பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு புதிய தலைவலியாக அமையும்.
உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் வழியாக நடை
பெறுகிறது. அதுமட்டுமின்றி தென் சீனக்கடலின் அடிப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தென் சீனக்கடலை சீனா சொந்தம் கொண்டாடுவதுடன், ஆதிக்கமும் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளை அமைத்து, ராணுவ தளங்களையும் அமைத்துள்ளது.
ஆனால் இந்த தென் சீனக்கடலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
பிலிப்பைன்ஸ் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்கு ஐ.நா. சட்டதிட்டங்களின் அடிப்படையில் செயல்படுகிற சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அதில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு சீனாவுக்கு எதிராக அமைந்தது. குறிப்பாக, ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என அந்த தீர்ப்பாயம் திட்டவட்டமாக கூறி விட்டது. அது சீனாவுக்கு தலைவலியாக அமைந்தது.
இந்த நிலையில் சீனாவுக்கு புதிய தலைவலி தரும் வகையில் ஜப்பானும் களத்தில் இறங்குகிறது.
இதுபற்றி ஜப்பான் ராணுவ மந்திரி டொமோமி இனடா, வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எப்படி சீனா, கிழக்கு சீனக்கடலிலும், தென் சீனக்கடலிலும் தனது செயல்களால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தை தாண்டி கவலையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறது என விளக்கினார்.