அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயம் அடைந்தனர். ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் பொது கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் உலகத் தலைவர்கள் 190 பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் நியூஜெர்சி நகரில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் நேற்று முன்தினம் காலை ஒரு பைப் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அடுத்த சில மணி நேரங்களில் நியூயார்க் அருகேயுள்ள மன்ஹாட்டன் நகரில் செல்சீ பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 29 பேர் காயம் அடைந்தனர். செல்சீ பகுதியின் 27வது தெருவில் வெடிக்காத நிலையில் குக்கர் குண்டை, நியூயார்க் போலீஸ் வெடிகுண்டு நிபுணர்கள் மீட்டு செயல் இழக்கச் செய்தனர். இச்சம்பவம் குறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில், ‘‘குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 29 பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் லேசான காயம் அடைந்னர். இந்த குண்டுவெடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்துக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஐ.நா பொது கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு நியூயார்க்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குக்கர் குண்டு நடந்த இடத்தில் ஆய்வு பணி நடக்கிறது. நியூஜெர்சியில் நடந்த குண்டு வெடிப்புக்கும், மன்ஹாட்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து நியூயார்க் புறப்பட்ட அதிபர் ஒபாமாவிடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.