5
அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனை, இதுவரை நடத்திய அனைத்து சோதனைகளிலும் சக்திமிக்கது என கூறப்படுகிறது.
இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், இதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி, எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அதிர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தென்கொரியாவை பொறுத்தமட்டில் அணு ஆயுதங்கள் எதுவும் அந்த நாட்டிடம் கிடையாது. பாதுகாப்புக்கு அமெரிக்காவையே நம்பி இருக்கிறது.
வட கொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை இரண்டு முறை தென்கொரியாவுக்கு அனுப்பி பறக்க வைத்து, அந்த நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்தது. இது வடகொரியாவை மிரட்டும் நடவடிக்கைதான். ஆனாலும் வடகொரியா எதற்கும் அடிபணிவதாக இல்லை.