மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.
அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு அவரது பெயர் சூட்டும் முயற்சியில் மக்கள் ஈடுபடக்கூடும் என்பதால் அதற்கு இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தடை விதித்து உள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘‘எனது சகோதரர், தான் இறந்த பிறகு தனது பெயர் எந்தவொரு நிறுவனத்துக்கும், தெருவுக்கும், பூங்காவுக்கும் அல்லது இன்னபிற இடங்களுக்கும் சூட்டப்படுவதை விரும்பவில்லை. எனவே அவருடைய பெயரை சூட்டுவதற்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 25–ந் தேதி மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோ, தன் வாழ்நாளில் எந்தவொரு அமைப்புக்கும் தன் பெயர் சூட்டப்படாமல் பார்த்துக்கொண்டதும், தனிமனித துதி பாடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.