போப் லியோ இன்னும் ஓரிரு நாட்களில் சத்திரசிகிச்சை ஒன்றுக்கு உட்படவுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் தமக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனைகளின் போது, வைத்தியர்கள் தமது நுரையீரலில் கட்டி ஒன்றைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரார்த்தனைக் கூட்டமொன்றின் போது இந்த விடயத்தை பகிரங்கப்படுத்திய அவர், குறித்த கட்டி ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்றுவதே சிறந்தது என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார். வைத்தியர்களின் அந்த ஆலோசனைக்கு அமையவே தாம் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தாலிய தலைநகர் ரோமில் அமைந்துள்ள கெமெல்லி வைத்தியசாலையில் போப் லியோ சிகிச்சை பெறவுள்ளார். சத்திரசிகிச்சை நிறைவடைந்த பின்னர் அவர் முழுமையாகக் குணமடைவதற்கு சுமார் ஒரு வாரம் காலம் எடுக்கும் என வத்திக்கான் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த சத்திரசிகிச்சை மற்றும் அதனைத் தொடர்ந்த ஓய்வுக் காலம் என்பன அவரது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை பாதிக்குமா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை உருகுவே, ஆர்ஜென்டீனா மற்றும் பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கு அவர் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ள ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.