இரண்டாம் உலகப்போரின்போது அழிந்த நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் இந்த நிதியம் தொண்டாற்றி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான ‘தமிழன்’ படத்தில் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் மிகப்பிரபலமான கதாநாயகிகள் பட்டியலில் சுமார் பத்தாண்டுகளாக நீடித்து வருகிறார்.