துபாயை சேர்ந்த 35 வயது பெண் ஒரு மளிகை கடையில் பொருட்களை ‘ஆர்டர்’ செய்திருந்தார். அங்கு பணிபுரியும் 23 வயது இந்திய வாலிபர் அந்த பொருட்களை எடுத்து வந்தார்.
அப்போது தனது வீட்டின் தோட்டத்தில் இருந்த அப்பெண் வாலிபரை உள்ளே வர அனுமதித்தார். அதை தொடர்ந்து அந்த நபர் பொருட்களை டெலிவரி கொடுத்து விட்டு திரும்பினார். அப்போது திடீரென அப்பெண்ணை தொட்டு முத்தமிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் போலீசுக்கு டெலிபோன் செய்வதாக மிரட்டினார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை வாலிபர் மறுத்தார்.
தான் பொருட்களை எடுத்து சென்ற போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், தன்னையும் மது அருந்த அழைத்ததாகவும் கூறினார். அதற்கு மறுத்ததால் தன் மீது செக்ஸ் புகார் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் தடயவியல் நிபுணர்கள் அப்பெண்ணின் கழுத்தில் டி.என்.ஏ. சோதனை நடத்திய போது வாலிபர் முத்தமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அதை தொடர்ந்து அவருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தண்டனை அனுபவித்தபின் அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.