இந்தியப் பெருங்கடல் தீவு நாடு, மடகாஸ்கர். அங்கு தலைநகர் அண்டனானரிவோவுக்கு வட கிழக்கில் 90 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்சோஜொரோபீ நகரில் நேற்று முன்தினம் ஒரு திருமண கோஷ்டி பயணம் செய்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
தாறுமாறாக ஓடிய அந்த லாரி, பாலத்தில் இருந்து மனனரா ஆற்றில் விழுந்தது. அதில் பயணம் செய்தவர்கள் அலறினர்.
இந்த விபத்தில் புதுமணத்தம்பதியர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என மொத்தம் 45 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பலியானவர்களில் 27 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள், 9 பேர் குழந்தைகள். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புப் படையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அஞ்சோஜொரோபீ நகர மேயர் டாக்டர் லோவா ஆண்ட்ரியாமனன்ட்சோவா கூறுகையில், ‘‘இந்த விபத்தில் லாரியின் டிரைவரும் உயிரிழந்து விட்டார். எனவே விபத்துக்கான காரணம் இதுதான் என்று அறுதியிட்டு கூற முடியவில்லை. பலியானவர்கள் பலரும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தனர்’’ என்று குறிப்பிட்டார்.
திருமண கோஷ்டி சென்ற லாரி விபத்துக்குள்ளானது, மடகாஸ்கர் நாட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.