சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் நால்வர் சவூதி நாட்டவர்கள் என்பதுடன் பங்களாதேஷைச் சேர்ந்த இருவர் உட்பட அமெரிக்கா, எகிப்து, ஜோர்தான், சிரியா, பலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இத்தாக்குதலினால் விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் சவூதி அதிகாரிகள் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தங்களது விமானப் பயண ஒழுங்குகள் குறித்து அறிந்துகொள்ள அந்தந்த விமான நிறுவனங்களை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலின் பின்னர், தாம் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை முடக்கியுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடகப் பிரிவுத் தலைவர் சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
ஏமன் அரச படைகள் ஹூதிகளுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சவூதி வான்பரப்பை இராணுவ நடவடிக்கை வலயமாகப் பிரகடனப்படுத்திய ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த வான்வழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரியாத் விமான நிலையத்தின் மீதான இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானுடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், ஏமனில் ஹூதிகளுக்கு எதிராக சவூதி அரேபியா முன்னெடுக்கும் இராணுவத் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணைந்து கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பான தீர்மானம் விரைவில் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.