ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குர்திஸ்தான் பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரி கடந்த திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், சுதந்திரத்திற்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள், தனி நாடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் என குர்திஷ் தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஈராக் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ஹைதர் அல் அபாதி, குர்திஸ்தான் பிராந்திய அரசு பொதுவாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.