உலக நாடுகளால் வட கொரியா முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அடிக்கடி காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் வட கொரியா ராஜீய உறவுகளை வைத்துள்ளது.
வட கொரியா தனிமைப்படுத்தப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவதாகத் தெரிவதில், ஒரு வித்தியாசமான முரண்பாடு உள்ளது. வியக்கத்தக்க விதமாக வட கொரியா விரிவான ராஜீயத் தொடர்புகளை வைத்துள்ளது.
1948-ல் வட கொரியா உருவாக்கப்பட்டதில் இருந்து, வட கொரியா 160க்கும் மேற்பட்ட நாடுகளுடன் முறையாக ராஜீய உறவுகளை ஏற்படுத்தியது. 48 நாடுகளில் 55 தூதரங்கள் மற்றும் துணைத் தூதரங்களை வைத்துள்ளது.
ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட 25 நாடுகள் வட கொரியாவில் தூதரகங்களை வைத்துள்ளன என லோவி நிறுவனம் கூறியுள்ளது.
வட கொரியா உருவாக்கப்பட்டவுடன், சீனா ரஷ்யா ஆகிய கம்யூனிஸ்ட் அண்டை நாடுகள் உடனடியாக கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுடன் (வடகொரியாவின் அதிகாரபூர்வ பெயர் இதுதான்) இராஜீய உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.
வட கொரியாவுடன் உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு மற்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஸ்பெயின் , குவைத், பெரு, மெக்சிகோ, இத்தாலி, மியான்மர் போன்ற நாடுகள் கடந்த சில மாதங்களில் அந்த நாட்டில் இருந்து தங்களது தூதர்களை வெளியேற்றியது.
போர்ச்சுகல், உகாண்டா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை தங்களது உறவுகளை இடைநிறுத்தியுள்ளன.
ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல வட கொரியத் தூதரங்கள் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சில நாடுகள் வட கொரியாவுடனான உறவுகளை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. பல ஆஃப்ரிக்க நாடுகளுடன் இணைந்து வட கொரியா கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆற்றல் மற்றும் விவசாய திட்டங்களுக்காக மற்ற நாடுகளுடன் வட கொரிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நன்றி : பிபிசி தமிழ்