செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பௌத்த ஒழுக்க விதியின் கீழ் விசாரணையா??? | அ. நிக்ஸன்

பௌத்த ஒழுக்க விதியின் கீழ் விசாரணையா??? | அ. நிக்ஸன்

3 minutes read

ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பின் பின்னணி!!!

— — —

* பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு வத்திக்கானின் புதிய நடைமுறை…

* பிரித்தானிய அங்கலிக்கன் திருஅவையும் அதே ஏற்பாடு…

* நவீன உலகப் பொதுநீதியை கற்க வேண்டிய இலங்கை…

— — —

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம், ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கொள்கையைத் தீவிரமாக வலியுறுத்தி வரும் சூழலில், அட்டமாஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, இலங்கைப் பொதுச் சட்டத்திற்கு மாறாக பௌத்த சங்க ஒழுக்க விதிமுறையை முன்னிறுத்துவது எங்கனம் நியாயமாகும்?

நவீன உலகப் பொதுநீதி என்ற ஒன்று உண்டல்லவா?

கத்தோலிக்க திருஅவை மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அங்கலிக்கன் திருஅவை (Church of England) ஆகியவற்றின் மதத் தலைவர்கள் தவறு செய்தால், அவர்களை விசாரிக்கத் தனித்தனியான திருச்சபைச் சட்டமுறைகள் (Ecclesiastical / Canon Law) நடைமுறையில் உள்ளன.

ஆனாலும், நிதி மோசடி, பாலியல் குற்றங்கள் போன்ற பொதுவான குற்றவியல் செயல்களுக்கு, சாதாரண மக்களை விசாரணைக்கு உட்படுத்தும் பொதுவான நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்களின் ஊடாகவே விசாரணைகள் நடத்தப்படும்.

இந்த நவீன உலகப் பொதுமுறையைத் தற்போது பிரித்தானியாவும் இத்தாலியும் 2021 ஆம் ஆண்டு முதல்  நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்த உலகப் பொதுமுறை குறித்து, கத்தோலிக்க திருஅவையின் ‘வத்திக்கான் நியூஸ்’ (Vatican News) மற்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) ஆகிய முதன்மைச் செய்தித் தளங்கள் இந்த ஆண்டு செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஒரு மதத் தலைவர் பாலியல் துஸ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட குற்றவியல் செயல்களில் ஈடுபட்டால், மத அடிப்படையிலான நீதிப் பொறிமுறையின் மூலம் அதற்கு விசாரணை நடத்த முடியாது என்ற வாதங்களை இச்செய்தித் தளங்கள் முன்வைத்துள்ளன.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் 2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டச் சீர்திருத்தங்களையும் அவை சுட்டிக்காட்டி, சிறந்த ஏற்பாடு என்றும் இச் செய்தித் தளங்கள் வரவேற்றிருந்தன.

இத்தாலி நாட்டின் வத்திக்கான் நகரை மையப்படுத்திய கத்தோலிக்க திருஅவை, மற்றும் பிரித்தானியாவின் அங்கலிக்கன் திருஅவை ஆகியவற்றுக்குத் தனியான சபை நீதிமன்றங்கள் உள்ளன.

பேராயர்கள் (Archbishops), ஆயர்கள் அல்லது குருக்கள் மதக் கோட்பாடுகளை மீறினாலோ, சபை ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறினாலோ அல்லது திருஅவைச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தினாலோ இந்தச் சபை நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடக்கும்.

ஓர் அங்கலிக்கன் மதத் தலைவர், பிரித்தானியப் பொதுச் சட்டத்திற்கு மாறான கொலை, கொள்ளை, நிதி மோசடி, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் (Criminal) செயல்களில் ஈடுபட்டால், அவருக்குச் சபைச் சட்டம் பாதுகாப்பு வழங்காது.

பிரித்தானியாவின் சாதாரண சட்டத்தின்படி, அந்நாட்டின் பொலிஸ் துறையும் நீதிமன்றங்களும் நேரடியாக அவர்களைக் கைது செய்து, பிரித்தானிய பொதுச் சட்டத்தின் கீழ் விசாரித்துத் தண்டனை வழங்கும்; சிறையிலும் அடைக்கும்.

அதேபோன்று, வத்திக்கானில் திருஅவை நிர்வாகம் மற்றும் ஆன்மீகக் கடமைகளை ஒழுங்குபடுத்த ‘கத்தோலிக்க திருஅவைச் சட்டம்’ (Canon Law) என்ற மரபு வழிச் சட்டம், நடைமுறையில் உள்ளது.

கடந்த காலங்களில், கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் (Bishops) ஏதேனும் தவறு செய்தால், அவர்களைச் சாதாரண நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது என்ற சிறப்புச் சலுகை இருந்தது.

குற்றம் இழைத்த கர்தினால்களை மற்றொரு கர்தினால் தலைமையிலான உயர்மட்டக் குழுவே விசாரிக்க முடியும் என்ற விதி இருந்தது.

ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் 2021 இல் நடைமுறைப்படுத்திய புதிய சட்ட சீர்திருத்தத்தின்படி இந்தச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது, கர்தினால்கள் நிதி மோசடி போன்ற பொதுவான குற்றங்களைச் செய்தால், வத்திக்கானின் சாதாரண நீதிமன்றத்தில் உள்ள சாதாரண பொதுமக்களான (Lay Judges) நீதிபதிகளே இவர்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

உதாரணமாக, 2023 இல் கர்தினால் ஆன்ஜெலோ பெச்சு (Cardinal Angelo Becciu) என்பவருக்கு நிதி மோசடி வழக்கில் வத்திக்கான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

வத்திக்கான் என்பது இத்தாலி நாட்டுக்குள் இருந்தாலும், அது தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடாகும்.

ஆகவே, வத்திக்கானுக்குள் நடக்கும் குற்றங்களை வத்திக்கானின் சொந்த நீதிமன்றமே விசாரிக்கும்.

இருப்பினும், குற்றவாளிகள் இத்தாலி எல்லைக்குள் தப்பியோடினாலோ, அல்லது இத்தாலிய பொலிஸ் துறையுடன் இணைந்து கூட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலோ மாத்திரமே, அங்கு இத்தாலிய பொதுச் சட்டம் பயன்படுத்தப்படும்.

கத்தோலிக்க திருஅவைச் சட்டங்களின்படி, பூமியில் திருத்தந்தைக்கு மேல் எந்தவொரு மனித அதிகாரமும் இல்லை. (The First See is judged by no one)

அதனால், பதவியில் இருக்கும் திருத்தந்தையை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. அவர் தனிப்பட்ட முறையில் பதவி விலகினால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் சாத்தியமாகும்.

ஆகவே, வத்திக்கானில் கர்தினால்களாக இருந்தாலும், பிரித்தானியாவில் பேராயர்களாக இருந்தாலும், சிவில் மற்றும் குற்றவியல் தவறுகளுக்கு அந்நாடுகளின் பொதுச் சட்டமே இறுதியானது என்பதை இந்த விளக்கம் புரிய வைத்துள்ளது.

அகவே, இலங்கையிலும் பௌத்த சங்க முறை விசாரணை என்பது மத ஒழுங்கு தொடர்பானது மாத்திரமே தவிர, அது இலங்கைத்தீவின் பொதுவான நீதிமன்ற விசாரணைகளுக்கு மாற்றீடாகவோ அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரணாகவோ இருக்க முடியாது.

இதனை அனைத்துச் சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும்.

ஏனெனில், பௌத்த சங்க முறையின் (Kathikawath) கீழ் விசாரணை நடத்தப்படும் என்ற அநுரவின் அறிவிப்பு, இலங்கையில் சட்ட ஆட்சி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கண்டி மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பௌத்த சங்க விசாரணை முறைமையைக் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி அநுர கூறியிருப்பது வேடிக்கையானது.

இந்த நகர்வானது, இலங்கை அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பிரதான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டத் துறை அதிகாரங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும்.

குற்றம் செய்தவர் ஒரு மதத் தலைவராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, நாட்டின் பொதுவான சட்டத்தின்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரமும் பொலிஸாரும் சிவில் நீதிமன்றங்களுமே விசாரிக்க வேண்டும்.

கதிகாவத்’ (Kathikawath) எனப்படும் பௌத்த குருமார் பின்பற்றுவதற்காகத் தங்களுக்குள் வகுத்துக்கொள்ளும் “மத ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிக் கோவை” என்பதற்கு அமைவாக மாத்திரம், இத்தகைய குற்றங்களை விசாரித்து முடிவு எடுக்க முடியாது.

இந்த நடைமுறை சமகால நவீன சட்ட முறைமைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற உலகப் பொது நீதியின் (Rule of Law) அடிப்படையில் இந்த விவகாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.