செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இளைஞர்களுக்கான பொன்னான வாய்ப்பு | பால் உற்பத்தியில் எழுச்சி பெறுமா கண்டாவளை ? | மா. சுவேந்திரன்

இளைஞர்களுக்கான பொன்னான வாய்ப்பு | பால் உற்பத்தியில் எழுச்சி பெறுமா கண்டாவளை ? | மா. சுவேந்திரன்

2 minutes read

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் கிராமிய பொருளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பால் உற்பத்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி இன்னும் அந்தத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதன் விளைவாக, ஆண்டுதோறும் பெருமளவு பால் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால் வெளிநாட்டு நாணயமும் (US டொலர்) கணிசமாக செலவாகிறது.

இந்தப் பின்னணியில், பால் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் தன்னிறைவை நோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கு புதிய அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாக வட மாகாணத்தில் கண்டாவளை பிரதேசத்தில் முதலாவது பால் பண்ணை மையம் ( diary hup ) கடந்த மாதம் (31 ஜீலை 2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பாக கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பல்வேறு ஊக்குவிப்பு மற்றும்  மானிய ஆதரவு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன இதன் மூலமாக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, குறிப்பாக இளைஞர்கள் தொழில்முனைவோராக உருவாக வேண்டிய காலம் இதுவாகும்.

வடக்கு மாகாணத்தில் பால் உற்பத்திக்கான மிக உயர்ந்த இயற்கை வளங்களும் விரிவாக்க வாய்ப்புகளும் கொண்ட மாவட்டங்களில் கிளிநொச்சி முன்னணியில் உள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டம் கடந்த வருடங்களில் வறுமையில் முதலிடமாக காணப்பட்டு வருகிறது என்பது கவலைக்குரிய விடயமாகும். பரந்த மேய்ச்சல் நிலங்கள், தீவனப் பயிரிடலுக்கான வளமான காணிகள், நீர்ப்பாசன வசதிகள், கால்நடை வளர்ப்பில் அனுபவம் கொண்ட விவசாயிகள், மற்றும் பால் சேகரிப்பு வலையமைப்புகள் போட்டி வாய்ந்த பால் கொள்வனவு நிறுவனங்கள் ( நெஸ்லே,மில்கோ, பால் கொள்வனவு கூட்டுறவு சபை கார்கில்ஸ்,நோர்த் லங்கா பிரைவேட் லிமிடெட்- இயக்கச்சி கிளிநொச்சி) ஆகியவை கிளிநொச்சியை ஒரு வலுவான பால் உற்பத்தி மையமாக மாற்றக்கூடிய அடித்தளங்களாக உள்ளன.

இன்று பால் உற்பத்தி என்பது வெறும் மாட்டுப் பண்ணை நடத்தும் தொழில் மட்டுமல்ல. அது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்கள் வியாபாரம் (பனீர்,யோகட்,தயிர், வெண்ணை,நெய்), வேலைவாய்ப்பு, பெண்களின் பொருளாதார பங்கேற்பு, இளைஞர் தொழில்முயற்சி, மற்றும் கிராமிய பொருளாதாரம், வருமான உயர்வு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு வளர்ச்சித் துறையாக மாறியுள்ளது.

குறிப்பாக கண்டாவளை பிரதேசத்தில் பால் உற்பத்தியை பல மடங்கு உயர்த்தக்கூடிய திறன் காணப்படுகிறது. தீவனப் புல் உற்பத்தி, மேம்பட்ட இனப்பெருக்கம் (AI), கால்நடை சுகாதார சேவைகள் (ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் துரித மற்றும் உயர்தர சேவை வழங்கக்கூடிய கால்நடை மருத்துவ, ஆலோசனை குழு) இயந்திரமயமாக்கல் மற்றும்  மேம்படுத்தப்பட்ட  பால் குளிரூட்டும் வசதிகள் ( மாலை நேர பால் கொள்வனவு)

மூலம் உற்பத்தித் திறன் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும்.

நாட்டின் மொத்த பால் தேவையில் இன்னும் ஒரு பெரிய பகுதி இறக்குமதியால் பூர்த்தி செய்யப்படுவதாக பல துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்று கண்டாவளை போன்ற வளம் பொருந்திய பகுதியில் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகும்.

பால் உற்பத்தி வளர்ச்சி என்பது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது மட்டுமல்ல; அது உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது. ஒரு நல்ல பால் பண்ணை மூலம் தினசரி வருமானம், இயற்கை உர உற்பத்தி,  இயற்கை எரிவாயு உற்பத்தி (Bio Gas), வேலைவாய்ப்பு, மற்றும் பல துணைத் தொழில்களும் உருவாகின்றன.

இன்றைய சூழலில் அரசாங்கம் வழங்கும் மானியங்கள், சலுகைக் கடன்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், கால்நடை மருத்துவ சேவைகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவை புதிய தலைமுறையினருக்கு ஒரு அரிய வாய்ப்பாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இளைஞர்கள் பால் உற்பத்தியை ஒரு நவீன தொழில்முயற்சி துறையாக மாற்ற வேண்டும். அவ்வகையில்

எதிர்காலத்தில் கண்டாவளை பிரதேசத்தை  இலங்கையின் முன்னணி பால் உற்பத்தி மையமாக மாற்றுவது சாத்தியமற்ற கனவு அல்ல.

முயன்றால் முடியுமானதொன்றே, அதற்கு அரசு, தனியார் துறை, பல்கலைக்கழகங்கள், கால்நடைத் திணைக்களம், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டும். உயர்தர பால் மாடுகள், தீவன உற்பத்தி, அறிவியல் சார்ந்த பண்ணை முகாமைத்துவம், நவீன  தொழில்நுட்பம் மற்றும் பெருமதி சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது கண்டாவளை பிரதேசம் தேசிய அளவில் முன்னோடியாக மாறும் இப்பிரதேச  இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் கால்நடை வளர்ப்புத் துறையில் இணைந்தால், அது அவர்களின் குடும்பங்களையும், கிளிநொச்சி மாவட்டத்தையும், வட மாகாணத்தையும் ,இலங்கையின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.

இளைஞர்களின் கைகளில் பால் உற்பத்தியின் எதிர்காலம் உள்ளது. இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று எடுக்கும் முதலீடும் முயற்சியும், நாளைய தன்னிறைவு பெற்ற சுபீட்சமான இலங்கையை உருவாக்கும் என்பது நம்பிக்கை.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்”.

ஆக்கம்:  மா. சுவேந்திரன்

B.A. (Hons) Economics, University of Jaffna

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.