செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை `மன உறுதி இருந்தால் தான் சாதனை சாத்தியம்!’ | முதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை

`மன உறுதி இருந்தால் தான் சாதனை சாத்தியம்!’ | முதன் முதலாக எவரெஸ்ட்டில் கால் பதித்தவரின் உண்மைக் கதை

2 minutes read

மன உறுதியை வளர்த்துக்கொள்வதுதான் இலக்கை அடைந்து, வெற்றியைப் பெறுவதற்கான சிறந்த வழி’ – ஜப்பானைச் சேர்ந்த புத்த தத்துவவியலாளரும் கல்வியாளருமான டாய்சாகு இகேடா (Daisaku Ikeda) தெளிவாகச் சொல்கிறார். மன உறுதி இருந்தால்தான் சாதனை சாத்தியம். வரலாறு நமக்கு உணர்த்துவது இந்த உண்மையைத்தான். ஒன்றை அடைந்தே தீருவது என்று மனதில் ஓர் உறுதி பிறந்துவிட்டால் அதை நிச்சயம் அடைந்துவிடலாம். என்ன ஒன்று… எந்தத் தடை வந்தாலும், அதை எதிர்த்து நிற்கிற உறுதியை மட்டும் விட்டுவிடவே கூடாது; எதற்காகவும் தளர்ந்து போகக் கூடாது. இதற்கு உதாரணமாக பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் எட்மண்ட் ஹிலாரி (Edmund Hillary)… டென்சிங்கோடு இணைந்து முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்தவர். எட்மண்ட் ஹில்லாரியின் கதை மன உறுதிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

 நியூசிலாந்திலுள்ள ஆக்லாண்டில் (Aukland) பிறந்தவர் ஹிலாரி. `மலையேற்றம்’ பலருக்குப் பொழுதுபோக்கு; ஹிலாரிக்கோ அதுதான் வாழ்க்கை. எத்தனை மலைகளின் உச்சியைத் தொட முடியுமோ அத்தனையையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற தீராத வெறி. ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் தொடங்கி எத்தனையோ மலைகளின் உயரத் தொட்டிருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கால்பதிப்பதுதான் அவருடைய லட்சியம். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை, இடப்பாடுகளை, எதிர்கொண்ட இன்னல்களையெல்லாம் தன்னுடைய `ஹை அட்வெஞ்சர்’ (High Adventure) என்ற நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் எட்மண்ட் ஹிலாரி. அதில் அவருக்கு மன உறுதி கிடைத்ததற்கான ஒரு சம்பவமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எவரெஸ்ட்டுக்குச் செல்வதற்கான வழி அப்போது திபெத், நேபாளம் இரண்டின் கட்டுப்பாட்டில் இருந்தன. வருடத்துக்கு ஒருமுறைதான் மலையேறும் குழுவுக்கு அனுமதி கிடைத்தது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு மலையேற்றக் குழுவுடன் சேர்ந்து 1952-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏற முயற்சி செய்தார் ஹிலாரி. அந்தக் குழுவில் டென்சிங்கும் இருந்தார். அந்த முயற்சி தோற்றுப்போனது. தட்பவெப்ப நிலை மிக மோசமாக இருந்தது. ஹிலாரி, எவரெஸ்ட்டில் ஏற முடியக்வில்லையே என்கிற ஏக்கத்துடன் திரும்பினார். முற்றிலும் குலைந்து போயிருந்தார். கிட்டத்தட்ட எவரெஸ்ட்டின் முக்கால்வாசி தூரம் போய்விட்டு, உச்சியைத் தொடாமல் திரும்பியிருந்தது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்திருந்தது.

சில வாரங்கள் கழித்து ஹிலாரிக்கு இங்கிலாந்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாரோ ஓர் அமைப்பினர் `எங்கள் உறுப்பினர்களிடம் வந்து நீங்கள் பேச வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். முதலில் அவருக்கு இங்கிலாந்துக்குப் போகவே மனமில்லை. ஆனால், எங்கேயாவது போய்வந்தால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும், மன அமைதி கிடைக்கும் என்றும் தோன்றியது. கிளம்பிவிட்டார்.

குறிப்பிட்ட அந்த நாளில் விழா மேடையில் ஏறினார் ஹிலாரி. அவ்வளவுதான்… இடிமுழக்கம்போல் எழுந்தது கரவொலி. அதுவரை தன்னை ஒரு தோல்வியாளர் என நினைத்திருந்த ஹிலாரிக்கு அது ஆச்சர்யத்தைத் தந்தது. அரங்கிலிருந்தவர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. அந்தப் பாராட்டு மழை அவர் இதயத்தையே நனைத்துவிட்டது. அவரால் முதலில் பேசக்கூட முடியவில்லை. பார்வையாளர்கள் அவருடைய சாகசத்தை, அதன் அருமையைத் தெரிந்துகொண்டதற்கான அங்கீகாரத்தை அவர் உணர்ந்துகொண்டார். `நீங்கள் தோல்வியாளர் இல்லை மிஸ்டர் ஹிலாரி!’ என்று அந்தக் கைதட்டல் சொல்வதுபோல அவருக்கு இருந்தது. அந்த நிமிடத்தில் அவர் மனதில் ஓர் உறுதி பிறந்தது.

ஹிலாரி மைக்கின் முன்னாலிருந்து மெள்ள நகர்ந்து வந்தார். மேடையில் நடந்தார். மேடையின் பின்புறத்தில் ஒரு மலையின் படம் வரையப்பட்டிருந்தது. ஹிலாரி, அதன் உயரத்தைத் தொட்டுக்காட்டி, தன் முஷ்டியை உயர்த்தி உரத்த குரலில் இப்படிச் சொன்னார்… “எவரெஸ்ட் சிகரமே… முதல் முறை உன்னைத் தொட்டுவிட வந்தபோது நீ என்னைத் தோற்கடித்துவிட்டாய். அடுத்த முறை நான் உன்னைத் தோற்கடித்துவிடுவேன். ஏனென்றால், எப்படி நீ வளர்ந்திருக்கிறாயோ அதேபோல நானும் வளர்ந்துகொண்டிருக்கிறேன்…’’

அவர் மன உறுதி அதைச் சாதித்தும் காட்டியது. 1953-ம் வருடம், மே 29-ம் தேதி அவரும் டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள். எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இருவர்’ என்ற பெருமையையும் பெற்றார்கள்.

 

 

நன்றி : பாலு சத்யா | ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.