செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்

மலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்

2 minutes read

மலேசியாவில் 56 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம்: தென்கிழக்காசிய எல்லைகளில் மீண்டும் அகதிகள் அலை வீசுமா?

மியான்மரிலிருந்து படகு வழியாக வெளியேறிய 56 ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி Langkawi என்ற மலேசிய தீவுப்பகுதியில் கைப்பற்றப்பட்ட படகில் 19 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என மொத்தம் 56 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய கடற்படை தலைவர் அகமத் பத்ருதீன் தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர்கள் குடிவரவுத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்திலிருந்து கிளம்பிய இப்படகு, புயல் காரணமாக கடந்த வாரம் தெற்கு தாய்லாந்தின் தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், தாய்லாந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மலேசியாவை நோக்கிய பயணத்தை ரோஹிங்கிய அகதிகள் தொடர்ந்துள்ளனர்.

 

மீண்டும் அகதிகள் அலை?

இந்த சூழலில், தென்கிழக்காசிய நாடுகளின் எல்லைகளில் மீண்டும் அகதிகள் அலை வீசுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மியான்மரில் 2012 ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த போது இவ்வாறான படகு வழிப் பயணங்கள் அதிகரித்திருந்தன. இதன் உச்சமாக 2015 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ரோஹிங்கியா அகதிகளின் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக எச்சரித்த இந்நாட்டு அரசுகள்,  பல எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இவ்வாறான பயணங்கள் படிப்படியாக குறைந்து வர, கடந்த ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறை மீண்டும் தென்கிழக்காசிய எல்லைகளில் நெருக்கடியான நிலையை உருவாக்கியுள்ளது.  இந்த வன்முறையினால் மியான்மரிலிருந்து வெளியேறிய 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் மியான்மர்- வங்கதேசம் இடையே ஏற்பட்டுள்ளதால் ரோஹிங்கியா அகதிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக வேறு நாடுகளில் தஞ்சமடைய முயற்சிக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். இது ஆட்கடத்தல்காரர்களுக்கு ஏற்ற சூழலைக் கூட உருவாக்கும் என எச்சரித்தனர்.

இந்த நிலையில், 56 ரோஹிங்கியா அகதிகளின் மலேசியாவை நோக்கிய பயணம் குறித்து விசாரிக்க தாய்லாந்து காவற்துறை தலைமை அதிகாரி சைஜிந்தா உத்தரவிட்டுள்ளார். தாய்லாந்து தீவுப்பகுதியில் இப்படகு நிறுத்தப்பட்டது, ஆட்கடத்தல்காரர்களின் சோதனை முயற்சியாக இருக்குமா என அவர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

அதே போல், இந்தோனேசிய குடிவரவுத்துறை அதிகாரி அகுங் சம்பூர்னோ, “இவ்வாறான படகு பயணங்கள் தொடர்ந்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னிருந்த நெருக்கடியை மீண்டும் உருவாக்கக்கூடும்” என அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.

“மியான்மரில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகின்றது. அத்துடன் ஆசியாவின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மத்தியில் இந்தோனேசியா உள்ளதால் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களுக்கு வசதியான கடல் வழியாக எங்கள் நீர்வழிபாதைகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதால், மலேசியாவை அடையும் முயற்சியில் பல ரோஹிங்கியா அகதிகள் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகின்றது. மலேசியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், ‘ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி’ வாக்குகளின் அங்கமாகவும் இருக்கும் என எண்ணப்படுகின்றது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.