மதுரையில் இளையராஜா பங்கேற்கும் “சங்கீத திருநாள்’ மெகா இசை நிகழ்ச்சிமதுரையில் இளையராஜா பங்கேற்கும் “சங்கீத திருநாள்’ மெகா இசை நிகழ்ச்சி

திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் சங்கீத திருநாள் மெகா இசை நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

எங்களது சொந்த ஊரான பண்ணைபுரம் மக்களுக்கும், மதுரை பகுதியினருக்கும் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்பது இப் பகுதி ரசிகர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் “சங்கீத திருநாள்’ என்ற பெயரில் மெகா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியைப் போலவே மதுரை தமுக்கம் மைதானத்திலும் ஏப்.5 ஆம் தேதி நடைபெறும். இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களைத் தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை வழங்க உள்ளேன்.

இதில் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர், பாடகர்கள் மனோ, விஜய் பிரகாஷ், ஹரிஹரன், எஸ்.என்.சுரேந்தர், சித்ரா, சாதனா சர்க்கம், உமா ரமணன், ஷாலினி, ரம்யா உள்ளிட்ட பிரபல பாடகர்கள், இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் 80 பேர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இளையராஜா ரசிகர் கிளப் (ஐஎப்சி) துவங்கப்படுகிறது. மேலும், எனது இசையமைப்பில், இயக்குநர் சசிதரன் இயக்கத்தில் உருவான வாராயோ வெண்ணிலாவே திரைப்படத்தின் பாடல்கள் இந் நிகழ்ச்சியின்போது வெளியிடப்படுகிறது என்றார்.

இளையராஜா ரசிகர் கிளப் உருவாக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்டகால விருப்பமாக இருந்தது. அதற்கு தற்போதுதான் இளையராஜா அனுமதி வழங்கியுள்ளார். ரசிகர் கிளப் உறுப்பினர் சந்தாவாக ரூ.100 பெறப்படும். இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் திரைப்படங்களின் பாடல்கள் அடங்கிய சி.டி. உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும் ஐஎப்சி மூலமாக பல்வேறு சேவைகளைச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்று ஐஎப்சி நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான வேலுசாமி கூறினார்.

வாராயோ வெண்ணிலாவே திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இத் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஹரிபிரியா நாயகியாகவும் நடித்துள்ளனர் என்று இயக்குநர் சசிதரன் கூறினார்.

ஆசிரியர்