செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகை‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகை

‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகை‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகை

2 minutes read

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கேட்டு தமிழக அரசுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.

ஆனால், ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரிச்சலுகை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த ஜனவரி 14–ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரெட் ஜெயின்ட் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கெத்து’ என்பது தமிழ் சொல்தான். திருப்புகழில் ‘கெத்து’ என்ற வார்த்தை வருகிறது என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘கெத்து’ தமிழ் சொல் அல்ல. அது கன்னட மொழிச் சொல். திருப்புகழிலில் ‘கெத்து’ என்ற வார்த்தை வருகிறது. இருந்தாலும், திருப்புகழில் 33 பிற மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ் ஆராய்ச்சி துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கெத்து’ தமிழ் சொல் அல்ல. சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகராதியில் இந்த வார்த்தையே இல்லை என்று கூறியுள்ளது.

எனவே, மனுதாரர் படத்துக்கு வரிச்சலுகை வழங்க மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டு இருந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன், ‘திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம் வெளியிட்டுள்ள அகராதியில் ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு தந்திரம் என்று அர்த்தம் கூறியுள்ளது. இதுபோல பல அகராதிகளில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கூறப்பட்டுள்ளது. அரசு உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே வரிச்சலுகை வழங்க மறுக்கிறது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி துரைசாமி இன்று காலையில் தீர்ப்பு வழங்கினார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:

‘கெத்து’ என்ற சொல் தமிழ்தான். பல அகராதிகளில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் வளர்ச்சித்துறை அகராதிகளை சரி பார்க்காமல், ‘கெத்து’ என்பது தமிழ் சொல் அல்ல. அது கன்னட மொழிச் சொல் என்று கூறியுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையின் இந்த செயல்பாடு வேதனை அளிக்கிறது. மனுதாரர் தன் விண்ணப்பத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இதன் படி பார்த்தால் கெத்து என்பது தமிழ் சொல் இல்லை. அதேநேரம் குறிப்பிட்டு இருந்தால், அது பரிசீலிக்கப்பட்டு இருக்கும் என்று அரசு தரப்பில் கூறியுள்ளது.

வரிச்சலுகை கேட்டு மனுதாரர் செய்த விண்ணப்பத்தில், திரைப்படத்தின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். தமிழில் குறிப்பிட்டுள்ளபடி, அதை தமிழ் வார்த்தை என்று கருதி வரிச்சலுகை வழங்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு அரசு செய்யவில்லை. ஆங்கில வார்த்தையின் அடிப்படையில்தான், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது என்பதை தன்னுடைய அரசாணையில் தமிழக அரசு குறிப்பிடவில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளின்படி இது தமிழ் சொல் அல்ல என்று கூறுவதை ஏற்க முடியாது.

இதை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் TAMILNADU என்றுதான் எழுதப்படுகிறது. இதன்படி பார்த்தால் ‘டமில்’ என்றுதான் வாசிக்கவேண்டும். எனவே ஒரு காலக்கட்டத்தில், இது தமிழே இல்லை என்று கூட கூறி விடுவார்களோ! என்று தோன்றுகிறது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறேன். ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தைதான். அதனால், ‘கெத்து’ படத்துக்கு வரிச்சலுகை வழங்கவேண்டும். இந்த வரிச்சலுகை அந்த படம் வெளியான நாள் முதல் வழங்கப்படவேண்டும். வரிச்சலுகை வழங்க மறுத்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.