நடிகர் ஷாருக்கான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து தேறினார். 1988-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர், பட்டம் பெறாமல் விட்டு விட்டார். அவர் மும்பை வந்து இந்திப்பட உலகில் நுழைந்து, முன்னணி நட்சத்திரமாகி விட்டார்.
இந்த நிலையில் தனது ‘பேன்’ (விசிறி) படத்தின் பாடல் வெளியீட்டுக்காக டெல்லி சென்ற அவர், தான் படித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்கு நேற்று சென்றார். அங்கு, தனது பி.ஏ. பட்டத்தை கல்லூரி முதல்வர் ராமா சர்மாவிடம் இருந்து பெற்றார்.
அப்போது ஷாருக்கான், “இது எனக்கு ஒரு சிறப்பான தருணம். 1988-ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய நான் திரும்பவும் வந்திருக்கிறேன். நான் இப்போது தவற விட்டது, என் குழந்தைகளைத்தான். நான் அவர்களுக்கு எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் காட்ட விரும்பினேன். ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் வரவில்லை” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கல்லூரி முதல்வர் ராமா சர்மா, “இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஷாருக்கிற்கு பட்டம் அளிப்பதில் மிகவும் மகிழ்கிறோம். அவரது பட்டத்தை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தோம். அதை அவருக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரை மாணவராக பெற்றிருந்ததற்கு இந்த கல்லூரி பெருமிதம் கொள்கிறது” என குறிப்பிட்டார்.