திமுகவின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ விளம்பரத்துக்குத் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேமா வெர்ஸன் 2 என்கிற ஒரு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதற்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக எதிர்ப்பைப் பதிவு செய்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் விஜய் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸும் அனுப்பினார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றது குறித்து ஒரு பேட்டியில் கூறிய சிவகார்த்திகேயன், அது கிண்டல் செய்த நிகழ்ச்சியை முன்வைத்து உருவாக்கப்பட்ட பாடல் என்றார். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இந்நிலையில் தமிழகத் தேர்தலை முன்னிட்டு, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என்கிற வாசகம் கொண்ட விளம்பரத்தை திமுக வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த விளம்பரம் குறித்து கூறியதாவது: அடுத்தக் கட்டமாக, அந்த வார்த்தைகள் அரசியலாகி இருக்கின்றன. நான் எந்தக் கட்சியையும் சாராதவள். ஆனால் என் வார்த்தைகள் நியாயத்தின் குரலாக ஒலிக்கும் என்றால் அதற்காக நான் சந்தோஷம் தான் படுவேன் என்று அவர் பேட்டியளித்திருந்தார்.
மற்றவர்கள் இந்த வாசகத்தைப் பயன்படுத்தியபோது கண்டனம் தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன், திமுகவின் விளம்பரத்துக்கு மட்டும் ஆதரவளிப்பது ஏன் என்கிற கேள்வியை அவர் சமூகவலைத்தளங்களில் எதிர்கொண்டார். இதையடுத்து தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்த ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
நான் அவ்வாறு பேட்டி கொடுக்கவில்லை. நான் அம்மாவுக்கு எதிரானவர் கிடையாது. இந்த ஆணாதிக்க உலகத்தில் அவர் சாதித்த விஷயங்களைக் கண்டு நான் பிரமிக்கிறேன். அந்த விளம்பரம் என்னைக் குறி வைக்கவில்லை. ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ விவகாரத்தில் இனியும் நான் நேரத்தைச் செலவழிக்கமாட்டேன் என்று பத்திரிகைகளிடம் கூறிவிட்டேன் என்றார்.