குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகம் ஆனவர் குட்டி பத்மினி. பின்னர் கதாநாயகி ஆனார். அடுத்து தயாரிப்பாளர் ஆகி சின்னத்திரை தொடர்களை தயாரித்து வருகிறார். தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின் போது, நடிகர் சங்கத்துடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்தார். இதுதவிர சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இப்போது விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க குட்டி பத்மினி ஏற்பாடு செய்து இருக்கிறார். இதற்காக குட்டி பத்மினியின் கிரீடா அமைப்பு மூலம் விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இந்திய கிரிக்கெட் முன்னணி வீரர் முரளி விஜய், தென் இந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் ஆகியோர் இந்த கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.
குட்டி பத்மினி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ், ரித்தீஷ், ஒய்.எம்.சி.ஏ. தேசிய கவுன்சில் துணை தலைவர் ஜேக்கப் ராஜ்குமார், நடிகர்கள் விக்னேஷ், மனோபாலா, பூச்சிமுருகன், நடிகைகள் சோனியா, லலிதா குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.