‘‘வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் சமந்தா. அடுத்த வருடம் அவரை திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகர் நாக சைதன்யா கூறினார்.
இதுகுறித்து நடிகர் நாக சைதன்யா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி:– சமந்தாவுக்கும் உங்களுக்கும் எப்போது திருமணம்?
பதில்:– நானும் சமந்தாவும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் திருமணம் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொள்ள ஆடம்பரமாக நடக்கும்.
கேள்வி:– உங்கள் காதல் எப்போது மலர்ந்தது?
பதில்:– தெலுங்கில் மாய சேஷவே படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தபோது நட்பு ஏற்பட்டது. படங்களின் வெற்றி தோல்வி, சந்தோஷம், கஷ்டம் உள்பட அனைத்து விஷயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். நாளடைவில் அது காதலாக மலர்ந்து விட்டது.
கேள்வி: திருமணம் செய்து கொள்ள சமந்தாதான் சரியானவர் என்று உங்களுக்கு எப்போது தோன்றியது?
பதில்: எனக்கு 30 வயது ஆகிவிட்டது. இப்போதுதான் குடும்ப வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். எனது குடும்பத்தினர் பாரம்பரியமாக சினிமாவில் இருந்து வந்தவர்கள். எனது தாத்தா நாகேஷ்வரராவ், பழம்பெரும் நடிகர். அப்பா நாகார்ஜுனா நடிகராக இருக்கிறார். அம்மா வழியில் தாத்தாவான ராமாநாயுடு அதிக படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். நடிகர் வெங்கடேஷ் எனது தாய்மாமன்,
நடிகர் ராணாவும் எனது உறவினர். எனவேதான் நானும் நடிகராக என்னை நிலை நிறுத்திக்கொள்ள சினிமாவுக்கு வந்தேன். ஒரு கட்டத்தில் சினிமாபோல வாழ்க்கையும் முக்கியம் என்று தோன்றியது. திருமணம் பற்றி முடிவு செய்ததும் சமந்தாவை தவிர எந்த பெண்ணும் என் ஞாபகத்துக்கு வரவில்லை. அப்போதுதான் அவரை என்னையறியாமல் நான் காதலிக்கிறேன் என்பது தெரிந்தது. அதன்பிறகு அவர்தான் எனக்கு மனைவியாக வர சரியானவர் என்று முடிவு செய்தேன்.
கேள்வி:– திருமண பேச்சை முதலில் எடுத்தது யார்?
பதில்: நான்தான் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டேன். உடனே சம்மதித்தார். அதன் பிறகு இரு வீட்டு பெற்றோரிடமும் தெரிவித்தோம். அவர்களும் சம்மதித்தனர்.
கேள்வி: சமந்தாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள்?
பதில்: நிறைய இருக்கிறது. சமந்தா எனக்கு கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம். எனக்கு அடிக்கடி கோபம் வரும். அதை கட்டுப்படுத்தி அமைதியான மனிதனாக மாற்றியவர் சமந்தாதான். அவரிடம் உள்ள நேர்மையும் எனக்கு பிடிக்கும். பொய் சொல்பவர்களை பார்த்தால் எனக்கு பிடிக்காது. நடந்த விஷயங்களை தவறாக இருந்தாலும் ஒளிவுமறைவு இல்லாமல் அப்படியே சொல்ல வேண்டும். சமந்தாவுக்கும் பொய் சொல்பவர்களை பிடிக்காது.
கேள்வி: திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிப்பீர்களா?
பதில்: தடை விதிக்க மாட்டேன். சமந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார். எனக்கு சினிமாவில் முன்னேற குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் சமந்தாவுக்கு யாரும் உதவியாக இல்லை. சொந்த முயற்சியில் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். அவர் திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம்.
கேள்வி: சமந்தாவை மணப்பதன் மூலம் இனி மலையாளம் கற்றுக்கொள்வீர்களா?
பதில்: சமந்தா மலையாளி இல்லை. பாதி தமிழ், பாதி தெலுங்கு பெண். அவருடைய தந்தை மதுரையில் வசித்த தெலுங்குக்காரர். அம்மா தமிழர்.
இவ்வாறு நாகசைதன்யா கூறினார்.