தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு ஸ்ரீதேவி துபாய்க்கு சென்றிருந்த போது கடந்த சனிக்கிழமை இரவு இறந்ததாக கூறப்பட்டது. மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரியின் மகனான நடிகர் மோகித் மார்வா திருமணம் கடந்த 20-ம் தேதி துபாயில் நடந்தது. இளைய மகள் குஷி, போனி கபூருடன் ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். திருமணம் முடிந்த பின், அவரது கணவரும் இளைய மகள் குஷியும் மும்பை திரும்பினர். ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
24-ம் தேதி சனிக்கிழமை மீண்டும் போனி கபூர் துபாய்க்கு சென்ற போது அவரை திடீரென கண்டதும் ஸ்ரீதேவி மிகுந்த ஆனந்தம் அடைந்தார். இருவருமாக இரவு வெளியே சென்று சாப்பிட நினைத்தனர். ஆயத்தம் செய்வதாக சொல்லி விட்டு குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி சுயநினைவின்றி விழுந்து விட்டார். நீண்ட நேரமாகியும் ஸ்ரீதேவி வெளியே வரவில்லை என சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. உதவியாளர்கள் மூலமாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மயக்கமடைந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல பரிசோதனைகளின் அறிக்கை முடிவுகள் வந்த பின்னரே ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏட்படலாம் என கூறப்பட்டுள்ளது.

