அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது. கோல்டன் விசா பெற்ற போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சித்ரா, அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.