Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சயந்தனின் ‘ஆதிரை’ | நாவல் விமர்சனம் | ரூபன் சிவராஜா

சயந்தனின் ‘ஆதிரை’ | நாவல் விமர்சனம் | ரூபன் சிவராஜா

2 minutes read

சயந்தனின் 2வது நாவல் ஆதிரை அண்மையில் வாசித்தேன். 2015இல் வெளிவந்த நாவல். 664 பக்கங்கள். மலையக மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசுவதனூடு கதை தொடங்குகின்றது. 1977 கலவரத்தினை அடுத்து வன்னிக்குச் சென்று குடியேறும் ஒரு மலையகக் குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளினது வாழ்வு வன்னியில் நீட்சி கொள்கிறது. வன்னியே கதையின் பிரதான களம். வன்னி மக்களும் வன்னிக்கு இடம்பெயர்ந்த மக்களும், போராளிகளும் கதையின் மாந்தர்கள். கிழக்கும் யாழ்ப்பாணமும் சில நிகழ்வுகளினூடு கதையின் போக்கில் ஆங்காங்கே பேசப்படுகின்றது.

வரலாற்று ஓட்டத்தில் நடந்தேறிய நிகழ்வுகள் புனைவுப் பாத்திரங்களினூடாக விபரிக்கப்படுகின்றன. 1977 இலிருந்து 2013 வரையான கிட்டத்தட்ட 35 ஆண்டுகால ஈழத்தமிழ் அரசியலினதும் வாழ்வினதும் வரலாற்றினதும், போர்ச்சூழலினதும் ஒரு பகுதி ஆதிரையில் பதிவாகியிருக்கின்றது. காலவரிசைப்படி (Chronological order) சமூக, அரசியல் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு, மூன்று தலைமுறையைச் சேர்ந்த பாத்திரப் படைப்புகளின் மூலமாக கதையின் நகர்வு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

மலையகத்தில் தொடங்குகின்ற கதை பிற்பாடு வன்னியை மையம் கொண்டு, முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்து, பின்னர் மெனிக் பார்ம், புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் போராளிகள் எதிர்கொள்ளும் சமூக வாழ்வியல் சிக்கல்கள் வரை பேசுகிறது. வன்னியின் காடுகள் ஆரம்பத்தில் பிரதான பாத்திரமாக கதையில் வியாபித்து நிற்கின்றது. வேட்டையும் விவசாயமுமான வாழ்வு பற்றிய விபரிப்பு முக்கிய இடம்பெறுகிறது.

சயந்தனின் ஆதிரைக்கான பட முடிவுகள்

வரலாற்றை அதன் போக்கில் இயங்கவிடுதல் என்பது இந்நாவலின் அடிப்படையான உத்தியாகக் காணமுடிகிறது. வலிந்த கருத்தியல் திணிப்புகள் இல்லை. பாத்திரங்கள் அதனதன் இயல்புகளோடு இயங்குகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் இயல்புக்கும் வரையறைக்கும் உட்பட்டு சம்பவங்களை நினைவுகூர்ந்தும் சம்பவங்களின் அங்கமாகவும் பயணிக்கின்றனர். பாத்திரங்கள் அந்தந்தச் சூழல்களுக்கும் அவர்களின் சமூகப் பார்வையின் கொள்ளளவுக்கும் உரிய வகையில் அரசியலைப் பேசுகின்றன.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பாத்திரங்கள் உள்ளன. இருப்பினும் அத்தார் என்ற பாத்திரமும் அவனது காதல் மனைவி சந்திராவும் தான் ஆதிரையின் மையப் பாத்திரங்கள். அத்தார் இடதுசாரியப் பார்வையும் செயற்பாட்டு அனுபவமும் கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். அவனைக் காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்தவள் சந்திரா. கிட்டத்தட்ட அனைத்துப் பாத்திரங்களுடனும் ஊடாடும் பாத்திரங்களாக இந்த இருபாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஊடாகவே சமூக, அரசியல் முரண்பாட்டுக்கூறுகள் ஓரளவு முன்வைக்கப்படுகின்றன. விவாதிக்கவும்படுகின்றன. விமர்சிக்கவும்படுகின்றன.

சாதிய முரண்பாடுகள், இயக்க முரண்பாடுகள், அழிவுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், தமிழ் அரசியலினதும் தமிழ்த் தேசியத்தினதும் போதாமைகள் இப்பாத்திரங்களின் ஊடாக பேசப்படுகின்றன. இரண்டு பேருமே முள்ளிவாய்க்காலில் இறந்து போகின்றனர்.

ஈழ அரசியல் நிகழ்வுகளோடு பரிட்சயமுள்ளவர்கள் ஆதிரை நாவலின் நிகழ்வுகளும் களமும் வரலாற்றுப் பிரதிபலிப்பாக உள்ளமையையும் புனையப்பட்ட பாத்திரங்கள் அந்த வரலாற்று நிகழ்வுகளுக்குள் ஊடாடியிருப்பதையும் எளிதில் உணர்வர்.

விமர்சனம் – ரூபன் சிவராஜா

சயந்தனின் ஆதிரைக்கான பட முடிவுகள்

ஆதிரை, நாவல், தமிழினி பதிப்பகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More