கவிதை | ஒரு கொரோனா நோயாளியின் வீடு | மனுஷ்ய புத்திரன்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட
கொரோனா நோயாளி
தன் வீடென
தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை

கையுறை அணிந்த கைகளால்
தயங்கித் தயங்கி தொடுகிறான்
கதவுகளையும் குழாய் திருகுகளையும்

தனித்த கொடியில் காயும்
தன் உடுப்புகளில்
சொட்டும் ஈரத்தை
உற்றுப்பார்க்கிறான்

தனது அறையின் இருக்கையைத்தவிர
எந்த இருக்கையிலும்
அவன் மறந்தும் அமர்வதில்லை

யாருமில்லாதபோது
வீட்டின் வரவேற்பறையின்
எதையும் தொட்டுவிடாமல் நடந்து
முகக்கவசத்தை சற்றே இறக்கிவிட்டு
ஆழமாக மூச்சு விடுகிறான்

நாளெல்லாம் ஒருவார்த்தை
பேசாமலிருந்து வலிக்கும் தாடைகளை
திறந்து மூடுகிறான்
கருணையுடன் எப்போதாவது
யாராவது பேச்சுக்கொடுக்கிறார்கள்
அவனுக்குச் சொல்ல
எந்த மறுமொழியும் இல்லை

தொலைபேசி உரையாடல்கள் எதுவும்
அரை நிமிடத்திற்கு மேல் நீடிப்பதில்லை
தன் அவலமான நிர்வாணத்தை
பிறர் காண்பது
அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது

பிரத்யேக இடங்களில்
அவனது பிரத்யேக சாப்பாட்டுத்தட்டுகளும்
கரண்டிகளும்
அமைதியாக தூங்குகின்றன

பிறிதொரு அறையில் கேட்கும்
சிரிப்பொலிகளை
உற்றுக்கேட்கிறான்
குழந்தைகளின் முகங்களை
நினைத்துக்கொள்கிறான்

தன்னை எதிர்கொள்ள நேர்பவர்கள்
தன்னிடமிருந்து அவசரமாக
விலகுவதன் பதட்டத்தை
அவனால் புரிந்துகொள்ள முடிகிறது
அவர்களுக்காக
உண்மையில் அவன் வருந்தவே செய்தான்

தனது கழிவறையை
கிருமிநாசினிகளால்
திரும்பத் திரும்ப
கழுவிக்கொண்டேயிருக்கிறான்

பல நாட்கள்
மாற்றப்படாத தன் படுக்கை விரிப்பின்
சிதறிய உணவுத்துணுக்குகளைத் தட்டுகிறான்
விளக்கணைத்ததும்
அமைதியின் இருள் கனிகிறது

வாழ்க்கையில்
எப்போதோ இட்ட கடைசிமுத்தங்கள்
மனதைக் கனக்கச் செய்கின்றன

தலை வலிக்கத் தொடங்குகிறது
நெற்றிபொட்டை யாராவது
சற்று அழுத்திவிட்டால் நன்றாக இருக்குமென
ஒரு கணம் நினைக்கிறான்
கழிவிரக்கதுடன் அந்த எண்ணத்தை
விலக்குகிறான்

கொரோனா நோயாளி
தன் வீட்டில் வேண்டாத விருந்தாளியாய்
தன்னை உணர்கிறான்
தான் ஒரு அபாயகரமான விலங்காக மாறிவிட்டது
அவனை மனமுடையச் செய்கிறது
மறுபடி தான் மனிதனாவதற்கு
இன்னும் எத்தனை நாட்கள்
என எண்ணியபடி
உறங்கிப்போகிறான்

இதெல்லாம் முடிந்தபிறகு
எல்லோரிடமும்
மன்னிப்புக்கேட்டுக்கொள்ள வேண்டுமென
கண்கள் பனிக்க
பாதிதூக்கத்தில் நினைத்துக்கொள்கிறான்

மேலும் தன் வீட்டைவிட்டு
சீக்கிரமே
நீண்ட தொலைவு சென்றுவிடவேண்டுமெனவும்

27.7.2020
இரவு 9.28


மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்