
நலமா?
எனும் கேள்வியை ஆசையோடு நீட்டுகிறேன்…
‘சென்றுவிட்டாய்’ என்று
பதில் வந்து விழுகிறது.
எனக்கான உன் கேள்வியிலும்
அதே பதில்
எழுத்துப் பிசகற்றுக்
கொழுவப்படுகிறது.
நலத்தை விடுத்து
மரணத்தை விசாரிக்கப் பழகுவோம்.
மரணம் எப்போது வரும்?
எப்படி வரும்?
முந்துவது நீயா? நானா?
நீ முந்தினால் நான்…?
நான் முந்தினால் நீ…?
நாமும் இல்லையெனில்…?
நாமிருவரும் இல்லாதபோது,
நமது புகைப்படத்தில்
மீதியாய் என்ன இருக்கும்…?
நம் சிரிப்பும்,
தோள் சேரும் கையணைப்பும்
என்னவாயிருக்கும்?
எங்கு போயிருக்கும்?
ஒளி வரையும்
நமது நிழலின் நிழல்
மெல்ல அகலும் காலத்திலும்…
நண்ப…!
சிரிக்கச் சொல்லாதே…
ஆனாலும்,
உன்னோடு,
ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறேன்.
செ.சுதர்சன்
26.09.2021
