சர்வதேச நெருக்கடி அதிகரிப்பு | அமைச்சர் பீரிஸ் இந்தியா விரைவு சர்வதேச நெருக்கடி அதிகரிப்பு | அமைச்சர் பீரிஸ் இந்தியா விரைவு

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று அஞ்சும் அரசு அதனை முறியடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.   மனித உரிமைகள் சபையில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக உறுப்பு நாடுகளை வளைத்துப் போடும் நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்தியாவின் ஆதரவை நாடி இன்று புதுடில்லிக்கு விரைகிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.   இந்தியாவின் துணை இல்லாமல் ஜெனிவாவில் தீர்மானத்தை முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இலங்கை அரசு அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்குத் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையில் தூதரகங்களை கொண்டிராத நாடுகளின் பிரதி நிதிகளைப் புதுடில்லியில் சந்தித்து ஆதரவு திரட்டும் புதிய இராஜதந்திர முயற்சியில் அவர் ஈடுபடவுள்ளார். அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துப் பேசவுள்ளார்.    ஏற்கனவே அபுதாபி சென்றுள்ள அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அங்கிருந்து இன்று புதன்கிழமை புதுடில்லிக்கு விரைகிறார் என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுடில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இராஜதந்திரிகளைச் சந்திக்கும் பீரிஸ், அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கவுள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறும் கோரவுள்ளார்.    இந்தக் கூட்டத்துக்கு  இலங்கையில் தூதரகங்களை கொண்டிராத நாடுகளின் தூதுவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்