இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசுஇரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசு

 

தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட விவாதத் தொடரில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பிற்பகல் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொள்வதாக இருந்த போதும், அவர் இந்நிகழ்விற்கு வருகை தரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் வாசுதேவ அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘தற்போது நாட்டிலுள்ள பாரதூரமான பிரச்சினை ஒற்றுமையின்மையாகும். இதற்கு இருமொழி கொள்கையென்பது அவசியமானதாகவுள்ளது. ஆகவே நாட்டில் ஒற்றுமையாக்கலை நடைமுறைப்படுத்த ஒரு பக்கம் தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி என்றால் மறுபக்கம் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் வடமாகாண முதலமைச்சர். ஆகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒற்றுமையினை முன்னெடுக்க வேண்டும்.

இது ஒரு வரைபடம் போன்று உடன் செய்யப்படும் விடயமல்ல. ஆகையால் இதனை வாத விவாதங்களின் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். இந்த மொழிப் பிரச்சினையினை சரியான நேர்கோட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் வெவ்வேறு மதங்களினை மதித்து புரிந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இலங்கையின் தலைநகரான கொழும்பு மேல் மாகாணத்திற்கு மட்டும் தலைநகராகவிருக்கின்றது. இதனை மாற்றி இலங்கை முழுவதற்கும் தலைநகர் என்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்