கெஜ்ரிவால் வெளியிட்ட மெகா ஊழல்வாதிகளின் பட்டியலில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், கனிமொழி!கெஜ்ரிவால் வெளியிட்ட மெகா ஊழல்வாதிகளின் பட்டியலில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், கனிமொழி!

இந்தியாவின் மெகா ஊழல்வாதிகளின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். இதில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், அழகிரி,  மாயவதி, முலாயம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், நாட்டை பலப்படுத்துவதற்காகவே தாங்கள் அரசியலில் இறங்கியதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மெகா ஊழல்வாதிகளின் பட்டியலை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கபில் சிபில், ஆ. ராசா, மாயாவதி, முலாயம் சிங் யாதவ், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  மொத்தம் 169 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

அப்போது பேசிய கெஜ்ரிவால், “மக்கள் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை விரும்புகின்றனர். யார் அவர்களது இமேஜை பெரிதாக்க  ரூ. 500 கோடி செலவு செய்கின்றனர்.  அவர்கள் மக்களிடம் இருந்து அதனை திரும்ப பெறுவார்கள். பிறகு எப்படி அவர்களால் நல்ல அரசை கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு ஊழல்வாதியோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே நமது நோக்கம். இந்த பட்டியலில் உங்களுக்கு தெரிந்த அதே சமயம் இடம்பெற தவறிய ஊழல்வாதிகளின் பெயர்களையும் நீங்கள் ( தொண்டர்கள்) சேர்த்துக்கொள்ளலாம் என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல் தலைவர்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெற்றுள்ளவர்கள் வருமாறு:

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், பி.எஸ். எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, கே.டி. குமாரசாமி, ப. சிதம்பரம், மு.க. அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், ஆ. ராசா, தருண் கோகய், கபில் சிபல், மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், பரூக் அப்துல்லா, நவீன் ஜிண்டால் உள்ளிட்ட பலர்

இடம்பெற்றுள்ளனர்.

ஆசிரியர்