இலங்கை எந்த முன்னேற்றமும் இல்லை: மூன்றாவது தீர்மானத்தை கொண்டு வருவோம்இலங்கை எந்த முன்னேற்றமும் இல்லை: மூன்றாவது தீர்மானத்தை கொண்டு வருவோம்

 

சிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரும் என்று, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்றுமாலை செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட கால உறவு என்பது, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல, இருநாட்டு மக்களுக்கும் இடையிலானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

சிறிலங்காவில் நடந்த சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஒத்துழைப்பு சார்ந்ததாகவும் அமைந்தன.

நீதி, நல்லிணக்கம், போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக, சிறிலங்கா சொந்தமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதற்கே அமெரிக்கா எப்போதும் அதரவளித்து வந்துள்ளது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கேடு, ஊழல்களம் சட்டத்தின பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும் சிறிலங்காவின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது. எனவே சிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வரும்.

ஆசிரியர்