பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு பிரித்தானியா வலியுறுத்தல்பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு பிரித்தானியா வலியுறுத்தல்

யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பை வெளிப்படுத்தும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறும் ஊக்கப்படுத்தும் சர்வதேச பிரசார இயக்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு  பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தை  வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் முகமாக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர்  ஜோன் ரன்கின்  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே மேற்கண்டவாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைப் பெண்கள் தாம் சார்ந்த சமூகத்தில் மென்மேலும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளனர். பெண்கள் பொறுப்பு வாயந்த பதவிகளை அலங்கரித்து வருவதுடன் பல செயற்பாட்டு நிலைகளில் பிரசித்தி பெற்றுள்ளவர்களாகவும் திகழ்கின்றனர். அதே சமயம் இலங்கையில் நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்திருந்த கொடூர யுத்தமானது இளம் பெண்களை ஏறக்குறைய 89,000 விதவைகளாகியுள்ளதுடன்,  பாலியல் வன்முறை மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளில் மேலும் மனக்காயங்களுக்குள்ளான நிலையில் தத்தம் குடும்பத் தலைமைப் பொறுப்புக்களை தலை மேல் சுமந்தும் வருகின்றனர். எனவே யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பை வெளிபடுத்தும் ஐ.நா.பிரகடனத்தில் கைச்சாத்திடவும், ஊக்கப்படுத்தவும் முன்னேற்ற நடவடிக்கையை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் சர்வதேச பிரசார இயக்கத்தில் இணைந்து  செயற்படவும் முன்வருமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை முழுமனத்துடன் ஊக்குவிக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகைச் சுற்றிலும் வன்முறை மற்றும் பாரபட்ச செயற்பாடுகள் தொடரும் வரை, உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான பெண்களும், கன்னிப் பெண்களும் மட்டுமன்றி ஆண்களும் சிறியவர்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் பூகோளப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை எட்டுவதற்கான முயற்சிகள் அனைத்தும் வேரறுக்கப்படும் நிலையே காணப்படுமென அழுத்தியுரைத்துள்ள உயர்ஸ்தானிகர் ரன்கின், பெண்களின் உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்தல் என்பது தங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ளவும் தங்களைப் பாதிக்கும் தீர்மானங்களைக் கட்டுப்படுத்துவதற்குமான ஓங்கி ஒலிக்கும் குரலொன்றையும், உரிமைகள் மற்றும் சக்தியையும் கொண்டு விளங்கும் சமநிலை கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்