ஆணிகளுக்குள் வைத்து 36 கோடி ஹெரோயின் கடத்தல்ஆணிகளுக்குள் வைத்து 36 கோடி ஹெரோயின் கடத்தல்

n-7

இரும்பு ‘போல்ட் அன்ட் நட்ஸ்’ என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமான முறையில் இரும்பு குழாய்களுக்குள் தலா 110 கிராம் வரையில் சிறிய பொதிகளாக தயாரித்து மறைத்து வைத்து பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சுமார் 36 கோடி ரூபா பெறுமதியான 36 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கை சுங்க திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஏ. சி. எஸ். கிறிஸ்டல் என்ற கப்பலில் கொண்டுவரப்பட்ட 20 அடி கொள்கலனுக்குள் இரண்டு பெட்டிகளில் ஹெரோயின் இருப்பதாக சுங்க திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இரண்டு பெட்டிகளையும் சுங்க திணைக்களத்தின் ஒறுகொடவத்த வருவாய்த்துறை செயலணி முனையத்திற்கு கொண்டுவந்து சோதனை செய்தனர்.
பெட்டிகள் இரண்டும் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அனுப்பப்பட்டதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளதுடன் பெட்டிக்குள் இரும்பு போல்ட் என்ட் நட்ஸ் ஆணிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. பெட்டிக்குள் குறிப்பிடப்பட்டது போன்று உண்மையான இரும்பு ஆணிகள் உரச் சாக்கில் இடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இது மட்டுமல்லாமல் அவற்றுடன் இரும்பு ஆணிகள் போன்று தயாரிக்கப்பட்ட இரும்பு குழாய்த் துண்டுகளும் காணப்பட்டதுடன் இவற்றின் வெளித் தோற்றத்தை பார்த்தால் உண்மையான இரும்பு ஆணிகள் போன்றே காணப்பட்டுள்ளது. எனினும் ஒவ்வொரு ஆணிக்குள்ளும் தலா 110 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் மாலை ஒவ்வொரு ஆணிகளாக பிரித்து அதனுள்ளிருந்த ஹெரோயின் போதைப் பொருளை மிகவும் கவனமாக சேகரித்தனர். இவ்வாறு 304 இரும்பு குழாய்களுக்குள் ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

iron nails in pile 4322
இதே வேளை 36 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்குள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தான் பிரஜையும் இலங்கையில் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுங்க அதிகாரி பராக்கிரம பஸ்நாயக்கா தெரிவித்தார். அத்துடன் கப்பல்துறை முகவர் மற்றும் வார்ப் கிளார்க் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்