ஆலயம் சென்று திரும்பிய யுவதி மூன்று பேரால் பாலியல் வல்லுறவு : யாழில் சம்பவம்ஆலயம் சென்று திரும்பிய யுவதி மூன்று பேரால் பாலியல் வல்லுறவு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் துன்னாலை யாக்கரை மயானத்தில் வைத்து மூன்று பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 19 வயதுப் பெண்ணொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற தினமான கடந்த வெள்ளிக்கிழமை தென்மராட்சி வரணிப் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவர்கள் மூன்று பேரால் வழிமறிக்கப்பட்டுள்ளனர். யுவதியுடன் வந்த இளைஞனை குறித்த மூவரும் தாக்கிவிட்டு, யுவதியை துன்னாலை யாக்கரை மயானத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக யுவதியுடன் வந்த இளைஞன் தொலைபேசி மூலம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரையும் மீட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் யுவதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பாலச்சந்திரன் பிரபாகரன் என்பவரின் கைப்பையினை ஆதாரமாக வைத்து குற்றத்துடன் தொடர்புடைய நபர்களைப் பொலிஸார் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

ஆசிரியர்