புதிய போர்க்குற்ற ஆதாரம் சனல் 4 வெளியீடு | வழமைபோல் அரசு மறுப்புபுதிய போர்க்குற்ற ஆதாரம் சனல் 4 வெளியீடு | வழமைபோல் அரசு மறுப்பு

புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் – 4 வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் பாலியல் ரீதியான கொடுமைகளை புரிவதை வெளிப்படுத்துகிறது.

இந்தக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை தமக்கு வழங்கியுள்ளதாக சனல் – 4 தெரிவித்துள்ளது.

இந்த காணொளி ஆதாரம் பற்றி சனல் – 4 பணிப்பாளர் கெலும் மெக்ரே குறிப்பிடுகையில்,

தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான காணொளி ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை செய்துள்ளதற்கான ஆதாரத்தை இந்த காணொளி வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான படங்களில் எந்த தவறுகளும் இல்லை எனவும் அந்த காட்சிகளை தான் பார்த்திருப்பதாகவும் அவை மோசமான காட்சிகள் எனவும் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.

போரில் 5 மரணங்கள் நிகழ்வது சிறிய சம்பவமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி சில மாதங்களில் ஷெல் தாக்குதல்களினால் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது ஒரு சிறிய விடயமல்ல.

இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக எமக்கு தெரியாது. போரின் இறுதியான இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவை படமாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு சீருடை அணிந்தவர் தனது கைத்தொலைபேசியில் இதனை படம்பிடித்துள்ளார். அதில் மற்றுமொருவர் சிங்களத்தில் பேசுகிறார்.

இந்த சீருடையினர் இறந்த புலிகளின் பெண் போராளிகளின் உடலில் பாலியல் வன்கொடுமைகளை செய்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர்.

இறந்த பெண்கள் யார் என்பதும் உண்மையில் என்ன நடந்தது என்பதும் எமக்கு தெரியாது. அவர்கள் சீருடைகளையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் போராளிகள் என்று தோன்றுகிறது.

இந்த படங்களை முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் ஆய்வு செய்ததுடன் படங்களில் உள்ள காயங்கள் உண்மையானது எனவும் காணொளிகள் போலியானவை அல்ல என்பதையும் உறுதிப்படுத்தினார்.

உடல்களில் காணப்படும் சில காயங்கள் போர்க் களத்தில் ஏற்பட்டதாக நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். ஆனால் அந்த காயங்கள் அப்படியானதாக இருக்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.

இந்த காயங்கள் ஒட்டுமொத்த படுகொலைகள்தான் என்பதற்கான சாத்தியத்தை தவிர்க்க முடியாது என்றும் துப்பாக்கிகளினால் சுடப்பட்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பிரித்தானிய தமிழர் பேரவை எமக்கு வழங்கியிருந்த டிஜிட்டல் காணொளிகளை பிரித்தானிய நீதிமன்றத்தில் பணிபுரியும் சுயாதீனமான மரியாதைக்குரிய ஒருவர் ஆராய்ந்தார். அவரும் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த காணொளிகள் தொடர்பில் பதிலளித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரை போன்ற சீருடையணிந்து பெரும்பான்மை சிங்கள இராணுவத்தினரைபோல் சிங்களத்தில் பேசியுள்ளதாக கூறியது.

சிறுவர்களை படையில் இணைத்து, பொதுமக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பது சந்தேகமில்லை. ஆனால் அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதனை பயன்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின்போது பிடிப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளிகளை வெளியிட்டோம். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது எனவும் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்