யானை மிதித்து விசுவமடுவில் ஏ.எல். மாணவன் பரிதாபச் சாவுயானை மிதித்து விசுவமடுவில் ஏ.எல். மாணவன் பரிதாபச் சாவு

விசுவமடுவில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை விரட்டிச் சென்ற மாணவனை அந்த யானை தூக்கி எறிந்து மிதித்துத் துவம்சம் செய்ததில் தலை நசுங்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்றிரவு அவரது சடலத்தை காட்டில் இருந்து மீட்ட பொலிஸார் அதனை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே நேற்றுக் காலை விசுவமடுவை அண்டிய தருமபுரத்தில் யானை தாக்கியதில் மற்றொருவர் காயமடைந்தார். தேங்காய் வியாபரத்துக்குச் சென்று கொண்டிருந்த அவரை கொலைவெறியுடன் யானை துரத்திய போதும் சயோசிதமாக ஓடித்தப்பிய அவர் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

கடந்த இருபது வருடங்களில் விசுவமடு கிராமங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்து ஒருவரைக் கொன்று போட்டிருப்பது இதுவே முதல் தடவை என்று மக்கள் கூறு கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது விசுவமடு மற்றும் தருமபுரம் பகுதிகள். விசுவமடுவின் நாச்சிக்குடா கிராமத்தில் நேற்றுப் புகுந்த யானை கொலைவெறியாட்டம் போட்டது. ஊர்மனைக்குள் பயிர்களை அழித்து கண்ணில் பட்டதை எல்லாம் புடுங்கி எறிந்து அட்டகாசம் பண்ணியது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். உடனே ஊரவர்கள் திரண்டு அதனைக் காட்டுக்குள் விரட்டினர். எனினும் அது திரும்பி வந்து கிராமத்தில் அழிச்சாட்டியம் செய்தது.

சாவு வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சில இளை ஞர்கள் ஊருக்குள் யானை புகுந்துள்ளது என்பதை அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு சென்ற நால்வரும் யானையின் பிடிக்குள் மாட்டிக் கொண்டனர். கொலை வெறியுடன் துரத்திய யானையிடமிருந்து தப்ப ஆளுக்கொரு பக்கமாக அவர்கள் சிதறி ஓடினர். ஆனால் மூவர் மட்டுமே தப்பிக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஒருவர் காணாமற்போயிருந்தார். இதையடுத்து அவரைத் தேடி கிராம மக்கள் காட்டுக்குள் இறங்கினர். ஓரிடத்தல் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது காணாமற்போனவரின் சட்டையின் ஒரு துண்டு. அந்த மரத்தில் சிலர் ஏறிப் பார்த்தபோது, காணாமற்போயிருந்த இளைஞரின் சடலத்தை வைத்துக் கொண்டு, அருகிலுள்ள ஓர் இடத்தில் யானை நிற்பதைக் கண்டனர்.

பெரும் பிரயத்தனப்பட்டு யானையை விரட்டிவிட்டுப் பார்த்தபோது காணாமற் போயிருந்த இளைஞர் உயிரிழந்திருந்தார். பழையகமம், முரசு மோட்டை, கிளிநொச்சியைச் சேர்ந்த சிவசுப்பிரமணிய கஜானன் (வயது -18) என்கிற கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் 2014 கலைப் பிரிவில் பயிலும் மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இரவு 6.30 மணியளவில் அவ ரது சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விசுவமடுவை அடுத்துள்ள தர்மபுரத்தில் தேங்காய் வியாபாரத்துக்காக அதிகாலையில் வீதியில் சென்று கொண்டிருந்தவரை யானை தாக்கியதில் அவர் காயமடைந்தார். வள்ளூர் முருகன் வீதி, கல்மடுநகர், வட்டக்கச்சியைச் சேர்ந்த சோமசுந்தரம் சபாபதிப்பிள்ளை (வயது-64) என்பவரே இவ்வாறு யானையால் மிதிபட்டார்.

தேங்காய் கொள்வனவுக்காக காலை 6.30 மணியளவில் சைக்கிளில் தர்மபுரத்துக்குச் சென்றுகொண்டிருந்த இவரை யானை கீழே தள்ளி விழ்த்தி காலால் மிதித்து நசுக்கிக் கொல்லப் பார்த்தது. எனினும் யானையின் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் மயிரிழையில் உயிர் பிழைத்தார் அவர்.

வீதியில் வந்தவர்களின் உதவியுடன் தருமபுரம் மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்தப் பகுதிகளில் எப்போதுமே யானைத் தொல்லை இருந்ததில்லை என்கிறார்கள் ஊரவர்கள். குறித்த யானை வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்து இரவோடு இரவாக இந்தப் பகுதியில் விடப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.

ஊர் மனைக்குள் திடீரென புகும் இந்த யானை பெரும் அச்சத்தை எற்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அந்த யானையைத் துரத்த முற்பட்ட பலரை அது திருப்பத் துரத்தியது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதில் ஒருவர் காயமடைந்ததாகவும், பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

போர் முடிந்த பின்னர் பொலனறுவைக் காட்டுப்பகுதியில் இருந்து விரட்டப்படும் யானைகள் இவ்வாறு வன்னிக்குள் நுழைகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

 

ஆசிரியர்