ஜெனீவாத் தீா்மானத்திற்கு கொழும்பு மதகுருமார் எதிர்ப்புஜெனீவாத் தீா்மானத்திற்கு கொழும்பு மதகுருமார் எதிர்ப்பு

இலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென கிறிஸ்தவ மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையிலேயே இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிறிஸ்தவ மதகுருமார் தெரிவித்தனர். ஜனாதிபதியின் கிறிஸ்தவ மத விவகார இணைப்பாளர் அருட்தந்தை சரத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தலைவர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலேயோ அல்லது சமாதானத்தின் மீது நம்பிக்கை இல்லாத வகையிலேயோ கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாதென இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த குருநாகலையைச் சேர்ந்த அருட்தந்தை சாந்த பிரான்ஸிஸ் கூறினார். தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பொறுப்பு உள்ளது. இதனை அறிந்து அவர்கள் அரசியல் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். மாறாக மக்களை குழப்பும் வகையில் செயற்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்று இறுதி மூன்றாண்டுகளில் நடைபெற்ற விடயங்கள் பற்றியே சர்வதேச சமூகம் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தியுள்ளது. எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் இடம்பெற்ற விடயங்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் குறித்து சர்வதேச சமூகம் ஏன் கவனம் செலுத்தவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

சமாதானத்தின் மீதும் நம்பிக்கையில்லாத தரப்பினரே நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அமைதியைக் குழப்புவதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இலங்கையர் என்ற ரீதியில் அதனை முறியடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மெதடிஸ் திருச்சபையைச் சேர்ந்த அருட்தந்தை எல்மோர் பெர்னான்டோ, இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை. இலங்கையர் ஆகிய நாம் உண்மைக்கு மதிப்பளிப்பவர்கள். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அருட்தந்தை ரஞ்சன கருணாரத்ன தெரிவித்தார். பொறுப்புடன் செயற்பட வேண்டிய தரப்பினர் அதிலிருந்து மாறிச் செயற்படுகின்றனர். இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் தூரநோக்கில் பார்க்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்