ஆசிய பசுபிக் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் அமைச்சா் சமரசிங்கஆசிய பசுபிக் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் அமைச்சா் சமரசிங்க

அமைச்சர் சமரசிங்க இலங்கையின் அபிவிருத்திப் பணிகளின் தற்போதைய நிலமைகளை விளக்கி ஆசிய பசுபிக் நாடுகளில் ஆதரவைத் திரட்டிவருகின்றார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிய பசுபிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் இவ்வுச்சிமாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதி களையும் சந்தித்து 2009ம் ஆண்டில் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த 5 ஆண்டு காலத்திற்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விளக்கிக் கூறினார்.

இக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை வைத்து தாம் மேற்கொள் ளும் நற்பணிகள் பற்றிய தகவல்களை தெரிவித்து வருகிறதென்றும் இவ்விதம் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டில் நல்லிணக்கப் பாட்டை ஏற்படுத்தி வருகிறதென்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த சந்திப்பின் போது விளக்கிக் கூறினார். யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுதல், உட்க ட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தல், சிவிலியன் நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜனநாயக ரீதியிலான அமைப்புகளை ஏற்படுத்தல், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் ஆகியவற்றுடன் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து நாட்டை வளம்பெறச் செய்யும் நல்ல பல திட்டங்களை அரசாங்கம் செய்திருக்கிறதென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருகோணமலையில் எக்ஸன் கொன்றிலா பார்ம் என்ற பிரான்ஸின் அரசசார்பற்ற அமைப்பின் உறுப்பினர்களின் படுகொலை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை ஆகியவை தொடர்பாக இராணுவ ரீதியிலான விசாரணைக்குழு விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் மேற்கொண்டிருக்கிறதென்றும் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்படுகள் தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்திருப் பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் திடசங்கற்பம் பூண்டிருக்கிறதென்று தெரிவித்த அமைச்சர், இத்தகைய நற்பணிகளுக்கு அமெரிக்கா மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கும் பிரேரணைகள் மூலமா அன்பளிப்பு செய்யப் போகிறார்கள் என்றும் அமைச்சர் சமரசிங்க அங்கிருந்த பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இவ்விதம் இலங்கை போன்ற ஒரு நாட்டை குறிவைத்து தண்டிக்க முயற்சி செய்வது ஒரு தவறான முன்மாதிரி என்றும் இத்தகைய துன்புறுத்தல்கள் ஏனைய நாடுகள் மீதும் ஏற்படலாம் என்பதை அனைத்து நாடுகளும் உணர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஆசிய பசுபிக் நாடுகளின் பிராந்தியக் குழு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர்