சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்பதைத் தவிர வேறு மாற்றுவழி என்ன இருக்கின்றது | த. தே. கூசர்வதேச சமூகத்திடம் நீதிகேட்பதைத் தவிர வேறு மாற்றுவழி என்ன இருக்கின்றது | த. தே. கூ

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றால் சர்வதேச விசாரணையே ஒரே வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எமது உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் அகிம்சை வழியில் தொடங்கி, ஆயுதப்போராட்டமாக வளர்ச்சியுற்று 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் எம்மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு எமது காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எமது பிரதேசம் இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட எமது உறவுகளில் பலரது இருப்பே இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது அரசாங்கம் சர்வதேச சட்டநெறிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளது என்று சர்வதேச நாடுகளே குற்றம் சுமத்தியுள்ளன.

உரிமைக்காகப் போராடிய ஒரு இனம் இன்று தனது அடையாளத்தைக் காப்பதற்குத் தன்னால் முடிந்த அளவிற்கு உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான் இன்று ஜெனிவாவின் மனித உரிமை ஆணையகத்தின் வருடாந்த கூட்டம் நடைபெறுகின்றது.

இலங்கை அரசாங்கம் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவாகட்டும், அல்லது காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவாகட்டும் இவை அனைத்துமே நம்பகத்தன்மை அற்றவை. இதனை  அவற்றின் செயற்பாடுகளே நன்கு நிரூபித்திருக்கின்றன. இந்நிலையில் எமக்கு சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்பதைத் தவிர வேறு மாற்றுவழி என்ன இருக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் இன்று அரசாங்கம் ஏதோ புதிய சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.

சரணடைந்தவர்கள் அனைவரும் இந்நாட்டு இராணுவத்தினரிடமே சரணடைந்தனர். அவர்களை ஏற்றிச் சென்றதும் இந்நாட்டிற்குச் சொந்தமான பேருந்துகள்தான்.

இவ்வாறிருக்க அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசாங்த்திற்கே தெரியாது என்று சொல்லுகின்றவர்களிடம் எப்படி நீதியையும் நேர்மையையும் எதிர்பார்ப்பது? ஆகவேதான் இந்நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்