அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் : அனைத்துலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் : அனைத்துலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

 

காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அச்சிறுமியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அனைத்துலக சமூகத்தினைக் கோரியுள்ளது.

கிளிநொச்சி தருமபுரத்தினைச் சேர்ந்த விபூசிகா எனும் 13வயதுடைய சிறுமியே இன்று சிறிலங்கா படையினரால் அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

காணாமல்போன தனது அண்ணனுக்காக தனது தாயாருடன் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளா நவிப்பிள்ளை மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் ஆகியோரது யாழ்ப்பாண பயணத்தின் போது, காணாமல்போனவர்களது உறவினர்களின் போராட்டத்தில் கதறியழுது, அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றிருந்தவர்.

இந்நிலையில் கிரிமினல் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி  சிறிலங்கா அரச படையினர் அச்சிறுமியின் வீட்டினைச்சுற்றி வளைத்திருந்தனர்.

அச்சிறுமியும் அவரது தாயாரும் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்த மறுகணம், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளார் அலுவலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாசபைக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் அவர்கள், காணாமல் போனவர்களது  உறவினர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தமாறும் கோரியிருந்தார்.

பிந்திய செய்திகளின்படி அச்சிறுமி மட்டுமே சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காவல்துறை ஒருவர் காயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண, சிறிலங்கா இராணுவத்துக்கு இதில் தொடர்பு கிடையாது என சிறுமியின் கடத்தலை மூடிமறைத்துள்ளார்.

 

ஆசிரியர்