50,000 தொன் அரிசி WFP க்கு அன்பளிப்பு 50,000 தொன் அரிசி WFP க்கு அன்பளிப்பு

இலங்கை மக்கள் உலக உணவுத் திட்டத்துக்கு 50,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பு செய்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதியான இலங்கை பணிப்பாளர் இஸ்மாயில் ஒமரிடம் இதனை நேற்றுக் கையளித்தார்.

2005 முதல் தொடர்ச்சியாக ஒன்பது வருடங்கள் மக்களுக்கு உரமானியம் வழங்கியமை, நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கியமை, தரிசு காணிகளில் அறுவடை, சலுகை கடன் விகிதத்தில் கடன் வழங்குதல் போன்ற அரசின் கொள்கையை அமுலாக்கும் நேரடி பெறுபேறாக 2013 முதல் இதுவரை 4.6 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் உற்பத்தியானது.

அரிசியில் தன்னிறைவு நிலையையும் அடைந்துள்ளோம். பயங்கரவாதம், சுனாமி அனர்த்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்குவதில் உலக உணவுத் திட்டம் பெரும் சேவையாற்றி உள்ளது. இந்த ஒத்துழைப்பைப் பாராட்டி உலக உணவுத் திட்டத்துடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இந்த அரிசி அன்பளிப்பு செய்யப்பட்டது.

50,000 மெட்ரிக் தொன் அரிசியில் உள்ளூரில் 10,000 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படும்.

மீதியான 40,000 மெட்ரிக் தொன் உலக உணவுத் திட்டத்துக்குரிய அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்படும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ. பீ. ஜயசுந்தர உட்பட உலக உணவுத் திட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Untitled

 

ஆசிரியர்