தே.மு.தி.க – பா.ம.க. இடையே சிக்கல் நீடிப்பு தே.மு.தி.க – பா.ம.க. இடையே சிக்கல் நீடிப்பு

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

பா.ம.க. கேட்கும் தொகுதிகளை தே.மு.தி.க.வும் கேட்டு பிடிவாதம் செய்வதால் பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் திணறுகிறார்கள். கடந்த 5 நாட்களாக நீடித்து வரும் இந்த தொகுதி பங்கீடு இன்றாவது முடிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் இந்த பிரச்சினை தீரவில்லை. தே.மு.தி.க – பா.ம.க. ஆகிய 2 கட்சிகளும் 6 தொகுதிகளை குறி வைத்து கேட்டு வருகின்றன. இரு கட்சி தொகுதி பங்கீடு குழுவிடம் பா.ஜனதா சமரசம் செய்தது. அதற்கு பின்பு 3 தொகுதிகளை விட்டுக்கொடுக்க பா.ம.க. முன்வந்தது. ஆனாலும் தே.மு. தி.க. தரப்பில் குறிப்பிட்ட 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று முடிவாகியுள்ள நிலையில் தே.மு.தி.க. கேட்கும் 5 தொகுதிகளை விட்டுக்கொடுக்க பா.ம.க. முன்வரவில்லை.

எனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறலாமா என்று பா.ம.க. ஆலோசித்து வருகிறது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால் அந்த கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் பா.ஜனதா கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்