ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் எடுக்கும் பெண் தீவிரவாதி, ஸ்பெயின் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
ஈராக், சிரியா நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த தீவிரவாத இயக்கத்தில் உலகின் பல நாடுகளில்-குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களும் சேர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள். ஆண்கள் மட்டுமல்லாது, இந்த நாடுகளை சேர்ந்த பெண்களும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 550 இளம் பெண் தீவிரவாதிகள் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த சிந்தனை அமைப்பான ‘ஸ்ட்ரேடஜிக் டயாலக்’ புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெண் தீவிரவாதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்ற சந்தேகத்துக்கு உரியவர், சமிரா யெரவ்.
இந்த பெண் தீவிரவாதி ஆப்பிரிக்க நாடான மொராக் காவை சேர்ந்தவர். ஸ்பெயினில் பார்சிலோனா நகருக்கு அருகேயுள்ள ரூபி நகரில் கணவர், 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். இவர்தான் ஐரோப்பா, மொராக்கா நாடுகளில் இருந்து பெண்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இவரை கைது செய்வதற்கு ஸ்பெயினில் உள்ள தேசிய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் இவர் துருக்கியில் இருந்து சிரியாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்பட்டபோது, துருக்கி அதிகாரிகளிடம் பிடிபட்டார். சிரியாவில் ஐ.எஸ். மேலிடத்தலைவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றபோதுதான் துருக்கி அதிகாரிகள் வசம் சிக்கி விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து அவர் ஸ்பெயினுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். பார்சிலோனா எல் பிராட் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, ஸ்பெயின் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பார்சிலோனா நகருக்கு அருகேயுள்ள ரூபி நகரில் தங்கி இருந்தபோது கடந்த டிசம்பர் மாதம் சமிரா யெரவ் தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார் என அவரது கணவர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இப்போது தாயுடன், குழந்தையும் பிடிபட்டு விட்டதால் குழந்தையை அதன் தந்தையிடம் ஸ்பெயின் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.