வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ஒரு பேராசிரியர் உள்பட பலர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குள்ள சர்ஸாடா பகுதியில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடந்தபோது இந்த பல்கலைக்கழக வளாகத்துக்குள் சுமார் 3500 பேர் இருந்ததாக தெரிகிறது.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான முதல்கட்ட தகவல்களின்படி வேதியியல் பேராசியர் உள்பட 20 பேர் இந்த தாக்குதலில் பலியானதாகவும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், உறுதிசெய்ய முடியாத சில ஊடக வட்டாரங்கள் பலி எண்ணிக்கை குறைந்தபட்சம் நூறாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் சண்டை ஓய்ந்த பின்னரே சரியான பலி எண்ணிக்கையை மதிப்பிட முடியும் என தெரிகிறது.