இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களிடமிருந்து யூதர்களைக் காப்பாற்றிய நால்வருக்கு அதிபர் ஒபாமா புதன்கிழமை புகழாரம் சூட்டினார்.
யூத இனப் படுகொலை நினைவு தினத்தையொட்டி வாஷிங்டனிலுள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நால்வரும் கெளரவிக்கப்பட்டனர்.
டென்னெஸீ மாகாணம், நாக்ஸ்வில் நகரைச் சேர்ந்த ரூடி எட்மண்ட், இண்டியானா மாகாணம், கோஷன் நகரைச் சேர்ந்த லாய்ஸ் கண்டென், போலந்து தலைநகர் வார்ஸாவைச் சேர்ந்த வாலெரி மற்றும் மேரிலா பிஜீவ்ஸ்கி ஆகிய அந்த நால்வரும், ஜெருசலேமில் செயல்பட்டு வரும் யூத இனப் படுகொலை ஆய்வு மையத்தால், உயிரைப் பணயம் வைத்து யூதர்களைக் காப்பாற்றிய யூதர் இனத்தைச் சேராதவர்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசுகையில், “”யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
எந்த ஒரு மதத்தின் மீதான தாக்குதலும், அனைத்து மதங்களின் மீதான தாக்குதலுக்கு சமமாகும்” என்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் அமைந்துள்ள ஆஷ்விட்ஸ் சிறை முகாமில் மட்டும் 11 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1945-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அந்த முகாம் ரஷியப் படையினரால் விடுவிக்கப்பட்டது. அந்த நாளை யூத இனப் படுகொலை நினைவு தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
1