பாகிஸ்தானில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிறுவனங்களை குறி வைத்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 144 குழந்தைகள் உள்ளிட்ட 150 பேரை கொன்று குவித்தது உலகையே அதிர வைத்தது.
அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளால் கல்வி நிறுவனங்கள் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பாதுகாப்பு குறைபாடு காரணமாக அந்த மாகாணத்தில் 230 கல்வி நிறுவனங்கள், குறிப்பாக அரசால் நடத்தப்படுகிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அவை 5 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அதற்குள் அவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் பலப்படுத்த வேண்டும். ஜீலம் பகுதியில் 10 அரசு கல்வி நிறுவனங்களுக்கும், 5 தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சக்வாலில் 5 பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி டிவிசனில் 138 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.