பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர் மாணவி மலாலா. இதனால் அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த மலாலா லண்டன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் இங்கிலாந்திலேயே தங்கி இருக்கிறார். அவர் பிரிமிங்காம் நகரில் உள்ள எட்பாஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது 18 வயது ஆகிறது.
நேற்று இங்கிலாந்தில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் மலாலா படிக்கும் பள்ளியும் ஒன்று. தீவிரவாதிகள் பெயரில் வந்த இந்த மிரட்டலில் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதேபோல ஆஸ்திரேலியாவிலும் சிட்னி நகரில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் ஒரே நபர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.