இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிப்பதற்கான ஐ.நா.படையின் (யுஎன்டிஓஎஃப்) தலைவராக, இந்திய ராணுவ அதிகாரி (மேஜர் ஜெனரல்) ஜெய்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தப் படையின் தலைவராக உள்ள நேபாள ராணுவ அதிகாரியான பூர்ண சந்திர தாபாவின் பதவிக் காலம் வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்தப் பதவிக்கு ஜெய்சங்கர் மேனன் நியமிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் புதன்கிழமை அறிவித்தார்.
இந்திய ராணுவப் பயிற்சி மையத்தின் தலைவர், பல்வேறு படைப் பிரிவுகளின் தளபதி என, ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் ஜெய்சங்கர் மேனன் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். மேலும் அவர், கடந்த 1993-ஆம் ஆண்டில் மொசாம்பிக்கிற்கும், 2007இல் லெபனானுக்கும் அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப் படையிலும் முக்கிய இடம் வகித்தார்.
இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையேயான போரை கைவிட்டு, கோலான் எல்லைப் பகுதியிலிருந்து விலகுவதென முடிவெடுத்த பின்னர், இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க, கடந்த 1974-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி, ஐ.நா. கண்காணிப்புப் படை நிறுவப்பட்டது.