பல நாடுகளின் ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய, ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச், துாதரக சிறைவாசத்தில் இருந்து விடுதலை ஆவாரா, இல்லையா என்பது இன்று தெரிந்து விடும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், ஜூலியன் அசாஞ்ச்; இவர், விக்கிலீக்ஸ் என்ற பெயரில் செயல்படும், ஊடக இணையதளத்தின் நிறுவனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரகசிய கோப்புகளை, இந்த இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர்.அதற்காக, இவரை கைது செய்ய, அமெரிக்க அரசு, பல வகையில் முயன்று வருகிறது. மேலும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுவீடன் அரசும், இவரை, நாடு கடத்தி சிறையில் தள்ளத் துடிக்கிறது.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் துாதரகத்தில், மூன்று ஆண்டுகளாக தஞ்சமடைந்து உள்ளார். அவர் வெளியில் வந்தால், கையில் விலங்கு மாட்ட, போலீசார், வீதியில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், அசாஞ்ச், ‘துாதரகத்தில் அடைந்து கிடப்பது, தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்’ எனக்கூறி, அதற்கு காரணமான, சுவீடன், பிரிட்டன் நாடுகள் மீது, ஐ.நா.,வின், தடுப்பு காவல் விசாரணைக் குழுவிடம் புகார் செய்தார். இந்த புகார் மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அசாஞ்ச் கூறியதாவது: தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், அதற்கு கட்டுப்பட்டு, பிரிட்டன் போலீசாரிடம் சரணடைவேன். அதேநேரத்தில், தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தால், பிரிட்டன் போலீசார், என்னை கைது செய்யக் கூடாது. என்னுடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, ‘ஐ.நா., விசாரணைக் குழு, அசாஞ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது’ என, லண்டனைச் சேர்ந்த, பி.பி.சி., செய்தி நிறுவனம், அதிகாரபூர்வமற்ற தகவலை வெளியிட்டு உள்ளது.